கரூர் நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறிய விஜய்

பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்திக்கும் நிகழ்வு மாமல்லபுரத்தில் உள்ள பார் பாயிண்ட்ஸ் ஓட்டலில் நடைபெற்றது. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை தனித்தனியாக சந்தித்து விஜய் ஆறுதல் கூறினார்.
கரூர் நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறிய விஜய்
Published on

கரூரில் கடந்த மாதம் 27-ந் தேதி தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பங்கேற்ற பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்தச் சம்பவத்தில், பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.20 லட்சம் நிவாரண உதவி வழங்கப்படும் என்றும், காயம் அடைந்தவர்களுக்கு ரூ.2 லட்சம் வழங்கப்படும் என்றும் விஜய் அறிவித்தார். அதன்படி உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் சம்பந்தப்பட்டவர்களின் வங்கி கணக்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் 'வீடியோ கால்' மூலம் பேசி ஆறுதல் தெரிவித்த விஜய், விரைவில் தங்களை நேரில் சந்திக்கிறேன் என உறுதி அளித்தார். அதன்படி, கரூர் சென்று பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்திக்க விஜய் முடிவு செய்தார். இதற்காக கரூரில் உள்ள ஏதேனும் ஒரு திருமண மண்டபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை விஜய் சந்தித்து பேசும் வகையில், த.வெ.க. சார்பில் மண்டபம் தேடும் பணி நடந்தது. மண்டபம் உறுதி செய்யப்பட்ட நிலையில், கடைசி நேரத்தில் மண்டபத்தின் உரிமையாளர் திடீரென விஜய்யின் சந்திப்பு நிகழ்ச்சிக்கு அனுமதி மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

இதனால் திருச்சியில் நிகழ்ச்சியை நடத்த கட்சியினர் முடிவு செய்தனர். ஆனால் அங்கும் நிகழ்ச்சி நடத்துவதற்கு அனுமதி கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதன் காரணமாக பாதிக்கப்பட்டவர்களை விஜய் சந்தித்து பேசுவதில் காலதாமதம் ஏற்பட்டது. இந்த நிலையில், உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினரையும் சென்னைக்கு வரவழைத்து நேரில் சந்திக்க விஜய் முடிவு செய்தார்.

இதையடுத்து சென்னை மாமல்லபுரத்தில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்திக்கும் வகையில் விஜயின் கட்சி நிர்வாகிகள் ஏற்பாடு செய்ததையடுத்து நேற்று இரவில் அவர்கள் மாமல்லபுரம் வந்தடைந்தனர்.

இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்திக்கும் நிகழ்வு மாமல்லபுரத்தில் உள்ள பார் பாயிண்ட்ஸ் ஓட்டலில் நடைபெற்றது. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை தனித்தனியாக சந்தித்து விஜய் ஆறுதல் கூறினார்.

கரூர் நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் கோரிக்கையை த.வெ.க. தலைவர் விஜய் எழுத்துப்பூர்வமாக பெறுகிறார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரின் கல்விச்செலவு உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளை எழுத்துப்பூர்வமாக அளிக்கின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com