தி.நகர் மற்றும் ஆர்.கே.நகர் மேம்பாலங்கள் மே மாதம் திறப்பு

மேட்லி சாலை சந்திப்புக்கு அருகே கட்டப்பட்ட புதிய மேம்பாலம், உஸ்மான் சாலை மேம்பாலத்தை விட உயரமாக இருந்தது. தி.நகர் மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டதும், சி.ஐ.டி. நகரில் உள்ள அண்ணாசாலை பகுதியில் இருந்து பனகல் பூங்காவிற்கு நேரடியாக செல்ல முடியும்
தி.நகர் மற்றும் ஆர்.கே.நகர் மேம்பாலங்கள் மே மாதம் திறப்பு
Published on

சென்னை:

சென்னை தி.நகர் மற்றும் ஆர்.கே.நகர் பகுதிகளில் மேம்பாலங்கள் கட்டப்பட்டு வருகின்றன. இந்த மேம்பாலங்கள் கடந்த 2 வருடங்களாக கட்டப்பட்டு வருகின்றன. இந்த 2 மேம்பாலங்களும் மே மாதம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

சென்னை சி.ஐ.டி. நகரில் தற்போது 1.2 கி.மீ நீளமுள்ள புதிய மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. மேலும் தி.நகர் ரங்கநாதன் தெரு அருகே உஸ்மான் சாலையில் போக்குவரத்து நெரிசலை சரி செய்யும் வகையில் சி.ஐ.டி. நகர் மேம்பாலத்தை, உஸ்மான் சாலை மேம்பாலத்துடன் இணைக்கும் பணி தொடங்கியுள்ளது. இதற்காக உஸ்மான் சாலையின் வடக்கு பகுதியும் விரிவாக்கம் செய்யப்படுகிறது. 2 மேம்பாலங்களும் ஒரே அகலத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக இந்த பணி நடைபெற்று வருகிறது.

இந்த மேம்பாலத்தை கடந்த டிசம்பர் மாதம் முடிக்க திட்டமிடப்பட்டது. ஆனால் சில காரணங்களால் பணிகள் தாமதம் ஆனது. மேட்லி சாலை சந்திப்புக்கு அருகே கட்டப்பட்ட புதிய மேம்பாலம், உஸ்மான் சாலை மேம்பாலத்தை விட உயரமாக இருந்தது. இதை சரி செய்ய சி.ஐ.டி. நகர் மேம்பாலம், ரங்கநாதன் தெருவுக்கு முன்பே முடிவடையும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் வாகனங்கள் தரை மட்டத்தில் 100 மீட்டர் தூரம் சென்று, பிறகு புதிய மேம்பாலத்தில் ஏற வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்து உள்ளனர்.

மேலும் பனகல் பூங்கா நோக்கி செல்லும் பொதுமக்களுக்கு ரங்கநாதன் தெருவுக்கு அருகில் ஒரு வெளியேறும் வழியும் இருக்கும். மேலும் சர்வீஸ் சாலையை உருவாக்க அருகில் உள்ள நிலத்தை கையகப்படுத்தும் பணியிலும் அதிகாரிகள் ஈடுபட்டு வருகிறார்கள். தி.நகர் மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டதும், சி.ஐ.டி. நகரில் உள்ள அண்ணா

சாலை பகுதியில் இருந்து பனகல் பூங்காவிற்கு நேரடியாக செல்ல முடியும்.

இதேபோல் சென்னை ஆர்.கே.நகரில் கட்டப்பட்டு வரும் மேம்பால பணிகளும் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. எனவே தி.நகர் மற்றும் ஆர்.கே.நகர் மேம்பாலங்கள் மே மாதம் திறக்கப்பட உள்ளன. இதை அமைச்சர் கே.என்.நேரு சட்டசபையிலும் அறிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com