உங்கள் பிரச்சனையை சட்டசபைக்கு வெளியே வைத்து கொள்ளுங்கள்- பா.ம.க. எம்.எல்.ஏ.க்களுக்கு சபாநாயகர் எச்சரிக்கை

சட்டமன்றம் அரசியலமைப்பு சட்டப்படி, பேரவை விதிப்படி, மரபுபடி செயல்படுகிறது.பா.ம.க கட்சி சார்பில் சட்டசபையில் 5 பேர் உள்ளனர்.
உங்கள் பிரச்சனையை சட்டசபைக்கு வெளியே வைத்து கொள்ளுங்கள்- பா.ம.க. எம்.எல்.ஏ.க்களுக்கு சபாநாயகர் எச்சரிக்கை
Published on

சென்னை:

பா.ம.க.வில் டாக்டர் ராமதாசுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. கட்சி இரு பிரிவாக உள்ளது.

இதில் டாக்டர் ராமதாஸ் பக்கம் ஜி.கே.மணி, அருள் ஆகிய இரு எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். அன்புமணி பக்கம் வெங்கடேசன், சதா சிவம், சிவகுமார் ஆகிய 3 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்.

இதில் சட்டசபையில் ஜி.கே.மணி எம்.எல்.ஏ., முதல் வரிசையில் இருக்கிறார். அவரது இருக்கையை மாற்ற வேண்டும் என்றும் அந்த இருக்கையில் வெங்கடேசனை அமர வைக்க வேண்டும் என்றும் சபாநாயகரிடம் அன்புமணி தரப்பில் கடிதம் கொடுத்து இருந்தனர்.

இந்த விவகாரத்துக்கு இன்று சபாநாயகர் விளக்கம் கொடுத்து உள்ளார். சட்டசபையில் இன்று டாக்டர் ராமதாஸ் தரப்பு எம்.எல்.ஏ. அருள் பேசி முடித்த நிலையில் அன்புமணி ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் பேச வாய்ப்பு கேட்டு எழுந்து நின்றனர்.

சபாநாயகர் அவர்களுக்கு விளக்கம் அளித்து பேசியதாவது:-

சட்டமன்றம் அரசியலமைப்பு சட்டப்படி, பேரவை விதிப்படி, மரபுபடி செயல்படுகிறது. இன்று பிரதான கட்சி ஜெயித்து வெற்றி பெற்றவர்கள் ஆட்சியில் இருப்பார்கள். பிரதான எதிர்க்கட்சி 24 எம்.எல்.ஏ.க்களுக்கு அதிகமாக இருந்தால் கட்சி அங்கீகாரத்துடன் சட்டசபையில் எதிர்க்கட்சியாக இருப்பார்கள்.

அதைவிட கம்மியாக 8 உறுப்பினர்கள் இருந்தால் அவர்கள் ஒரு குழுவாக, அணியாக இருப்பார்கள். இதுதான் சட்டமன்றத்தின் நடைமுறை. சட்டசபையில் பிரதான எதிர்க்கட்சி தலைவருக்கு மட்டும்தான் இருக்கையை எந்த இடத்தில் கொடுக்க வேண்டும் என்று பேரவை விதி சொல்கிறது.

மீதிமுள்ள அனைத்து எம்.எல்.ஏ.க்களை எங்கு உட்கார வைக்க வேண்டுமோ அது சபாநாயகரின் முழு விருப்பம். அதன்படி நான் வைத்திருக்கிறேனே தவிர நினைத்தவுடனே எழுதி கொடுத்துவிட்டு அதை நிறைவேற்ற வேண்டும் என யாரேனும் கேட்டால் அது நடைமுறைக்கு சாத்தியமில்லை.

பா.ம.க கட்சி சார்பில் சட்டசபையில் 5 பேர் உள்ளனர். இதில் இன்று நடைபெறும் விவாதத்திற்கு 2 பேர் எழுதி தந்தீர்கள். அதில் அருள், சிவகுமார் ஆகியோர் ஆகும். இதில் யாரை முதலில் கூப்பிடுவேன் என்றால் முதலில் எழுதி கொடுத்திருந்த அருளை கூப்பிடுவேன்.

நேற்று நீங்கள் என்னிடம் எதுவும் எழுதி கொடுக்காததால் உங்களை பேச அழைக்க முடியவில்லை. ஏதோ ஒரு கட்சி தலைமையகத்தில் எழுதி கொடுத்த தீர்மானத்தை இங்கு கொடுத்து அதை செயல்படுத்த சொன்னால் அது தவறானது.

இவ்வாறு சபாநாயகர் கூறினார்.

இதை கேட்ட அன்புமணி ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 3 பேரும் சபாநாயகர் முன்பு தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். அப்போது அவர்களை சபாநாயகர் எச்சரித்தார். உங்கள் பிரச்சனைகளை சட்டசபைக்கு வெளியே வைத்துக் கொள்ளுங்கள். இங்கு பிரச்சனை செய்தால் நடவடிக்கை எடுப்பேன் என்றார்.

இதைத் தொடர்ந்து பா.ம.க. எம்.எல்.எ.க்கள் 3 பேரும் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com