மதுரையில் நாளை நடைபெறும் தென்மண்டல தி.மு.க. தேர்தல் முகவர்கள் மாநாட்டுக்கான ஏற்பாடுகள் தீவிரம்

மதுரைக்கு நாளை காலை வருகை தரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். முதலமைச்சர் வருகையை முன்னிட்டு மதுரை மாநகரில் நாளை டிரோன் பறக்க தடை.
மதுரையில் நாளை நடைபெறும் தென்மண்டல தி.மு.க. தேர்தல் முகவர்கள் மாநாட்டுக்கான ஏற்பாடுகள் தீவிரம்
Published on

மதுரை:

தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி அடுத்த மாதம் அறிவிக்கப்படும் என எதிர் பார்க்கப்படும் நிலையில் கடந்த ஒரு மாத காலமாகவே அரசியல் களம் சூடுபிடித்து உள்ளது. ஆளும் கட்சியான தி.மு.க., எதிர்க்கட்சியான அ.தி.மு.க., நடிகர் விஜயின் த.வெ.க., நாம் தமிழர் கட்சி என 4 முனை போட்டி நிலவுகிறது.

கூட்டணி இறுதியாகி வரும் நிலையில் மக்களை சந்திக்க அரசியல் கட்சியினர் ஆயத்தமாகி வருகின்றனர். ஆளும் கட்சியான தி.மு.க. கடந்த ஒரு மாத காமலமாக மாவட்டந்தோறும் மகளிரணி, இளைஞரணி, பாக முகவர்கள் மாநாடு என நடத்தி தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வருகிறது.

அதன் ஒரு பகுதியாக மதுரையில் நாளை (21-ந் தேதி) தென் மண்டல தி.மு.க. தேர்தல் முகவர்கள் மாநாடு நடைபெறுகிறது. மாலை 5 மணியளவில் நடைபெறும் மாநாட்டில் தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு வருகிற தேர்தலில் பாக முகவர்கள் எவ்வாறு விழிப்புடன் செயல்பட வேண்டும் என ஆலோசனை வழங்கி பேசுகிறார். இதில். அமைச்சர்கள், தி.மு.க. தலைமை கழக நிர்வாகிகள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொள்கின்றனர்.

இதற்காக உத்தங்குடி பகுதியில் உள்ள கலைஞர் திடலில் கடந்த ஒரு வாரமாக தீவிர ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றது. தென் மாவட்டங்களை சேர்ந்த சுமார் ஒன்றரை லட்சத்திற்கு மேற்பட்ட தி.மு.க. தேர்தல் முகவர்கள் பங்கேற்கும் வகையில் ஏற்பாடுகள் முழுவீச்சில் செய்யப்பட்டு வருகிறது. மாநாட்டையொட்டி அண்ணா அறிவாலயம் போன்ற அமைப்பில் பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டு உள்ளது.

மாநாட்டில் பங்கேற்க வருபவர்கள் அமர்வதற்கு இருக்கைகள், குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் மருத்துவ முகாம், ஆம்புலன்சு வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. மேலும் மாநாட்டில் பங்கேற்பவர்களுக்கு அமைச்சர் மூர்த்தி ஏற்பாட்டில் உணவு பார்சல் வழங்கப்படுகிறது. மேலும் வாகனங்கள் நிறுத்த பார்க்கிங் வசதிகளும் திடல் அருகே ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

மதுரைக்கு நாளை காலை வருகை தரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். நாளை காலை 11.35 மணிக்கு வடபழஞ்சியில் உள்ள எல்கார்ட் தொழில் நுட்ப பூங்காவில் திறன் மேம்பாட்டு மைய கட்டிடத்தை திறந்து வைக்க உள்ளார். மதியம் 1 மணிக்கு வண்டியூர் கண்மாய் பூங்காவை திறந்து வைப்பதோடு பல்வேறு திட்ட பணிகளையும் தொடங்கி வைக்கிறார். மாலையில் காந்தி மியூசியத்தில் மக்கள் நீதி மய்யம் சார்பில் நடைபெறும் 'மறவோம்' நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். அதனை முடித்து கொண்டு இரவு 7.35 மணிக்கு சென்னைக்கு விமானம் மூலம் புறப்படுகிறார்.

முதலமைச்சர் வருகையை முன்னிட்டு மதுரை மாநகரில் நாளை டிரோன் பறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. போலீஸ் உயர் அதிகாரிகள் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com