தமிழ்நாட்டில் அடுத்த வாரம் முதல் SIR - ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் தகவல்

வாக்குச்சாவடி அதிகாரிகளாக உள்ள தி.மு.க.வினர், ஆளுங்கட்சிக்கு சாதகமாக செயல்படுகின்றனர். தொகுதியில் அ.தி.மு.க. ஆதரவாளர்கள் 13 ஆயிரம் நபர்களின் பெயர்கள், வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் அடுத்த வாரம் முதல் SIR - ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் தகவல்
Published on

சென்னை:

சென்னை ஐகோர்ட்டில், அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. சத்தியநாராயணன் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

சென்னை தி.நகர் தொகுதியில், 13 ஆயிரம் அ.தி.மு.க. ஆதரவாளர்களின் பெயரை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கி விட்டனர்.

வாக்குச்சாவடி அதிகாரிகளாக உள்ள தி.மு.க.வினர், ஆளுங்கட்சிக்கு சாதகமாக செயல்படுகின்றனர்.

1998-ம் ஆண்டு தி.நகர் தொகுதியில் 2 லட்சத்து 8 ஆயிரத்து 349 வாக்காளர்கள் இருந்த நிலையில், 30 ஆண்டுகளுக்கு பிறகு, 2021 ம் ஆண்டு வெறும் 36 ஆயிரத்து 656 வாக்காளர்கள் மட்டுமே அதிகரித்துள்ளனர். மக்கள் தொகைக்கும், வாக்காளர் பட்டியலில் உள்ள வாக்காளர்களின் எண்ணிக்கைக்கும் பெரும் வித்தியாசம் உள்ளது.

தொகுதியில் அ.தி.மு.க. ஆதரவாளர்கள் 13 ஆயிரம் நபர்களின் பெயர்கள், வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. அதேநேரம், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கப்படவில்லை. இதுசம்பந்தமாக தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு புகார் மனுக்கள் அனுப்பியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

அதனால், தேர்தல் நியாயமாகவும், நேர்மையாகவும் நடைபெறுவதை உறுதி செய்ய, 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு முன், தி.நகர் தொகுதியில் வாக்காளர் பட்டியலை மீண்டும் சரி பார்த்து, தவறான சேர்க்கை, நீக்கத்தை களைந்து இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கு, தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவத்சவா மற்றும் நீதிபதி ஜி.அருள் முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, தி.நகர் தொகுதியில் மொத்தமாக வாக்காளர்கள் சேர்க்கையும், நீக்கமும் நடந்துள்ளதால், அவற்றை சரிபார்த்து திருத்தக் கோரி தேர்தல் ஆணையத்துக்கு பல மனுக்கள் அனுப்பியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும், இது சம்பந்தமாக தமிழில் உள்ள ஆவணங்களை மொழி பெயர்த்து தாக்கல் செய்ய ஏதுவாக விசாரணையை தள்ளிவைக்க வேண்டும் எனவும் மனுதாரர் தரப்பில் கோரப்பட்டது.

தேர்தல் ஆணையம் தரப்பில், நாடு முழுவதும் தேர்தலை எதிர்கொண்டுள்ள தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில், பீகாரைப் போன்ற சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள், அடுத்த வாரம் தொடங்க உள்ளது. அப்போது, மனுதாரர் தெரிவித்த புகார்கள் கவனிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

மனுதாரர் தரப்பு கோரிக்கையை ஏற்று வழக்கை அடுத்த வாரத்துக்கு தள்ளிவைத்த நீதிபதிகள், பீகார் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளுக்கு எதிரான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவு நகல்களை தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com