விஜய பிரபாகரன் - சுதீஷ் இருவரில் யார் ராஜ்யசபா செல்வார்கள்? - பிரேமலதா தகவல்

அ.தி.மு.க. உடனான கூட்டணியில் தே.மு.தி.க தொடர்கிறது.விஜயுடன் கூட்டணி குறித்து 20 வருடம் கட்சியாக உள்ள தே.மு.தி.க.விடம் கேட்கக்கூடாது.
விஜய பிரபாகரன் - சுதீஷ் இருவரில் யார் ராஜ்யசபா செல்வார்கள்? - பிரேமலதா தகவல்
Published on

சென்னை:

தே.மு.தி.க. கொடி அறிமுகப்படுத்தப்பட்ட 25-ம் ஆண்டு வெள்ளிவிழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கட்சி கொடி ஏற்றி நலத்திட்ட உதவிகள் வழங்கி, கட்சி தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு இனிப்புகளை வழங்கினார்.

இதன்பின் செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா விஜயகாந்த் கூறியதாவது:-

த.வெ.க. உடன் கூட்டணி அமைப்போமா என்பதை விஜயிடம் தான் கேட்க வேண்டும். விஜயுடன் கூட்டணி குறித்து 20 வருடம் கட்சியாக உள்ள தே.மு.தி.க.விடம் கேட்கக்கூடாது.

அ.தி.மு.க.வின் உட்கட்சி பிரச்சனை தொடர்பாக கருத்துக்களை கூற நான் விரும்பவில்லை. ஜெயக்குமார் ஒரு கருத்து கூறுகிறார், செங்கோட்டையன் ஒரு கருத்து கூறுகிறார். எது உண்மையென அ.தி.மு.க.விடம் கேட்க வேண்டும்.

2026 சட்டசபை தேர்தலில் தே.மு.தி.க. இருக்கும் கூட்டணி மகத்தான வெற்றி பெற்று கேப்டன் கனவை வென்றெடுப்போம் என்றார்.

இதனிடையே, நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகித்த தே.மு.தி.க. விருதுநகர் தொகுதியில் போட்டியிட்டது. அப்போது தேர்தலில் வென்றால் விஜய பிரபாகரன் மக்களவை எம்.பி.யாகவும், தே.மு.திக. துணை பொதுச்செயலாளர் சுதீஷ் மாநிலங்களவை எம்.பி.யாகவும் ஆவார்கள் என்று கூறப்பட்டது. ஆனால் தேர்தலில் விஜய பிரபாகரன் தோல்வி அடைந்ததால் ராஜ்யசபா எம்.பியாக. இருவரில் யார் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்ற கேள்வியும் எழுந்தது.

இந்த நிலையில், தேர்தல் அறிவிக்கப்பட்ட பின் தே.மு.தி.க.வின் ராஜ்யசபா வேட்பாளர் யார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிப்படும் என்று பிரேமலதா கூறினார். மேலும் அவர் கூறியதாவது:- அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்தபோதே தே.மு.தி.க.வுக்கு ராஜ்யசபா சீட் என கையெழுத்தானது. தேர்வு செய்யும் நாளில் தே.மு.தி.க. சார்பாக யார் ராஜ்யசபா செல்வர் என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம். அ.தி.மு.க. உடனான கூட்டணியில் தே.மு.தி.க தொடர்கிறது என்றார். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com