கடலூரில் ஜனவரி 9-ந்தேதி தே.மு.தி.க. மாநில மாநாடு: பிரேமலதா விஜயகாந்த் அறிவிப்பு

சென்னை 100 அடி சாலைக்கு கேப்டன் விஜயகாந்த் பெயரை சூட்ட வேண்டும்.கச்சத்தீவை மீட்டெடுப்பதே மீனவர்களின் பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வாகும்.
கடலூரில் ஜனவரி 9-ந்தேதி தே.மு.தி.க. மாநில மாநாடு: பிரேமலதா விஜயகாந்த் அறிவிப்பு
Published on

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே மாதம்பட்டி கே.வி.மஹாலில் இன்று தே.மு.தி.க. தலைமை செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் தலைமை கழக நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். அதை பிரேமலதா விஜயகாந்த் அறிவித்தார்.

தே.மு.தி.க. பொதுச்செயலாளராக பிரேமலதா விஜயகாந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவைத் தலைவராக டாக்டர் இளங்கோவன், பொருளாளராக எல்.கே.சுதீஷ், தலைமை நிலைய செயலாளராக முன்னாள் எம்.எல்.ஏ. பார்த்தசாரதி, கொள்கை பரப்பு செயலாளராக அழகாபுரம் முன்னாள் எம்.எல்.ஏ. ஆர்.மோகன்ராஜ், துணை செயலாளர்களாக எம்.ஆர்.பன்னீர்செல்வம், சந்திரன், செந்தில்குமார், சுபா ரவி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

மேலும் இக்கூட்டத்தில் தே.மு.தி.க. இளைஞரணி செயலாளராக விஜய பிரபாகரன் நியமிக்கப்பட்டார்.

பொதுக்குழு கூட்டத்தில் தே.மு.தி.க. மாநில மாநாடு நடத்துவதற்கான முக்கிய அறிவிப்பை பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டார். கடலூர் மாவட்டத்தில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 9-ந்தேதி தே.மு.தி.க. மாநில மாநாடு நடத்தப்படும் என்று பிரேமலதா விஜயகாந்த் அறிவித்தார்.

பின்னர் கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன் விவரம் வருமாறு:-

* தே.மு.தி.க.வின் அனைத்து மாவட்டத்திலும் கழகத்திற்காக பணியாற்றி மறைந்த நிர்வாகிகள், தொண்டர்கள் மறைவிற்கும் மற்றும் உலக கத்தோலிக்க திருச்சபை தலைவர் போப் பிரான்சிஸ் மறைவிற்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

* ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் சுற்றுலா சென்ற பயணிகள் மீது தீவிரவாதிகள் கொடூரமாக தாக்குதல் நடத்தியதில் 26 பேர் உயிர் இழந்ததோடு, பலர் காயமடைந்துள்ளனர். இதை தே.மு.தி.க. வன்மையாக கண்டிக்கின்றது.

* தே.மு.தி.க. நிறுவனத் தலைவர் விஜயகாந்துக்கு மத்திய அரசு பாரத் ரத்னா விருது வழங்க வேண்டும். அவருக்கு மணி மண்டபம் அமைத்திட வேண்டும். சென்னை 100 அடி சாலைக்கு கேப்டன் விஜயகாந்த் பெயரை சூட்ட வேண்டும்.

* வக்பு சட்டத்தின் மூலம் இஸ்லாமியர்களின் சொத்துக்களுக்கு எந்தவித பாதிப்பும், தீங்கும் ஏற்படாது என்பதை மத்திய அரசு உறுதி செய்யவேண்டும்.

* மதுபானம் விற்பனையை படிப்படியாக குறைத்தும், கஞ்சா மற்றும் கள்ளச்சாராய விற்பனையை முற்றிலும் ஒழித்தும், தமிழகத்தை காக்க வேண்டியது தமிழக அரசின் கடமையாகும்.

* கச்சத்தீவை மீட்டெடுப்பதே மீனவர்களின் பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வாகும்.

* மின்சாரம் மற்றும் நூல் விலை உயர்வை கட்டுப்படுத்தி, ஜி.எஸ்.டி வரியை குறைத்து, நெசவாளர்களின் கூலியை உயர்த்தி, அவர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்ய வேண்டும்.

* தமிழகம் முழுவதும் இருக்கும் பட்டாசு ஆலைகளை ஆய்வு செய்து உயிர் இழப்புகளும், விபத்துக்களும் நடக்காத வண்ணம் மக்களை காக்க வேண்டியது தமிழக அரசின் கடமையாகும்.

மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com