பூண்டி ஏரிக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பு- 30 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

நீர்வரத்து அதிகமாகியதால் பூண்டி ஏரியின் மதகுகள் வழியாக தண்ணீர் திறப்பும் அதிகரிக்கப்பட்டது.ஏரியில் இருந்து வினாடிக்கு 9 ஆயிரத்து 500 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
பூண்டி ஏரிக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பு- 30 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
Published on

வடகிழக்கு பருவமழை காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் பலத்த மழை கொட்டி தீர்த்தது. இதனால் சென்னை நகர மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் பூண்டி ஏரிக்கு நீர்வரத்து அதிகமாகி நீர்மட்டம் கிடுகிடு என உயர்ந்து வருகிறது.

நேற்று முன்தினம் வினாடிக்கு 5 ஆயிரத்து 800 கனஅடி தண்ணீர் வந்த நிலையில் நேற்று மாலை நிலவரப்படி ஏரிக்கு 10 ஆயிரத்து 500 கனஅடியாக வரத்து அதிகரித்தது. நீர்வரத்து அதிகமாகியதால் பூண்டி ஏரியின் மதகுகள் வழியாக தண்ணீர் திறப்பும் அதிகரிக்கப்பட்டது.

பூண்டி ஏரின் உயரம் 35 அடி ஆகும். இதில் 3.231 டி.எம்.சி. தண்ணீரை சேமித்து வைக்கலாம். நேற்று மாலை 5 மணி நிலவரப்படி ஏரியின் நீர்மட்டம் 33 அடியாக பதிவாகி இருந்தது. பூண்டி ஏரியிலிருந்து இணைப்பு கால்வாய் வழியாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு 400 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. அதேபோல் சென்னை குடிநீர் வாரியத்துக்கு பேபி கால்வாயில் வினாடிக்கு 17 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.

இந்நிலையில் பூண்டி ஏரிக்கான நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி பூண்டி ஏரிக்கான நீர்வரத்து வினாடிக்கு 14 ஆயிரம் கனஅடியாக உயர்ந்துள்ளது. நேற்று மாலை 10 ஆயிரத்து 500 கனஅடியாக நீர்வரத்து இருந்த நிலையில் தொடர்ந்து நீர்வரத்து உயர்ந்து வருகிறது. ஏரியில் இருந்து வினாடிக்கு 9 ஆயிரத்து 500 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

பூண்டி ஏரியில் இருந்து 9,500 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் கொசஸ்தலை ஆற்றின் கரையோரம் உள்ள ஆற்றம்பாக்கம், ஒதப்பை, மோவூர், மெய்யூர், அணைக்கட்டு, ஐனப்பன்சத்திரம் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com