தீபாவளி திருடர்களை பிடிக்க டிரோன்கள் மூலம் போலீசார் தீவிர கண்காணிப்பு- அவசர உதவிக்கு செல்போன் எண்கள் அறிவிப்பு

தி.நகரில் மட்டும் புதிதாக 90 கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன.தீயணைப்பு வாகனங்கள், ஆம்புலன்ஸ் போன்றவையும் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கிறது.
தீபாவளி திருடர்களை பிடிக்க டிரோன்கள் மூலம் போலீசார் தீவிர கண்காணிப்பு- அவசர உதவிக்கு செல்போன் எண்கள் அறிவிப்பு
Published on

சென்னை:

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 5 நாட்களே இருக்கும் நிலையில் சென்னை மாநகரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

சென்னையில் மற்ற பகுதிகளைவிட தி.நகர் பகுதியில்தான் அதிக அளவில் பொதுமக்கள் ஜவுளி மற்றும் பொருட்களை வாங்குவதற்காக கூடுவார்கள். இதனை கருத்தில் கொண்டு ஒவ்வொரு ஆண்டும் தீபாவளியையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம்.

அந்த வகையில் இந்த ஆண்டும் தி.நகரில் தீபாவளிக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. தி.நகர் ரங்கநாதன் தெருவில் 5 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்களும் மற்ற இடங்களில் 3 கண்காணிப்பு கோபுரங்களும் அமைக்கப்பட்டுள்ளது.

தி.நகரில் மட்டும் புதிதாக 90 கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே அந்த பகுதிகளில் 28 கேமராக்கள் உள்ள நிலையில் பாண்டி பஜார் மாம்பலம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் மட்டும் 155 கேமராக்கள் மூலமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

3 டிரோன் கேமராக்கள் மூலமாக தீபாவளி திருடர்களைப் பிடிப்பதற்கு வலை விரிக்கப்பட்டுள்ளது. புரசைவாக்கம், வண்ணாரப்பேட்டை ஆகிய பகுதிகளிலும் தீபாவளி நெருங்கும் நேரங்களில் டிரோன் கேமராக்களை பயன்படுத்த போலீசார் திட்டமிட்டு உள்ளனர்.

தி.நகர் பகுதியில் தினமும் 200 போலீசார், 100 ஊர்க்காவல் படையினர், 100 ஆயுதப் படை காவலர்கள் ஆகியோர் சுழற்சி முறையில் பணியாற்றி வருகிறார்கள்.

வண்ணாரப்பேட்டை பகுதியில் 150 போலீசாரும், புரசைவாக்கத்தில் 120 போலீசாரும், தாம்பரம் பகுதியில் 250 காவலர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தி.நகர் பகுதியில் 16 ஒலி பெருக்கிகள் மூலமாகவும் போலீசார் பொதுமக்களை உஷார்படுத்திக் கொண்டே இருக்கிறார்கள். நீங்கள் கொண்டு வந்துள்ள பொருட்களை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள். உடமைகளை தவறவிட்டு விடாதீர்கள் என்பது போன்ற எச்சரிக்கை தகவல்களை திரும்பத் திரும்ப கூறிக் கொண்டே உள்ளனர். மக்களின் வசதிக்காக 4 காவல் உதவி மையங்கள், 2 தற்காலிக உதவி மையங்களும் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.

தீயணைப்பு வாகனங்கள், ஆம்புலன்ஸ் போன்றவையும் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கிறது.

தி.நகர் பகுதியில் வாகனங்களை நிறுத்துவதற்கு வெங்கட் நாராயணா சாலையில் உள்ள சோமசுந்தரம் மைதானம், ராமகிருஷ்ணா பள்ளி மைதானம், தி.நகர் மேம்பாலத்துக்கு கீழே என இடங்களும் ஒதுக்கி கொடுக்கப்பட்டு உள்ளன.

பொதுமக்களின் வசதிக்காக அவர்களின் அவசர தேவையை கருத்தில் கொண்டு 8939977649, 91504 72278 ஆகிய செல்போன் எண்களும் அவசர உதவி எண்களாக அறிவிக்கப்பட்டு உள்ளன.

ஒவ்வொரு தீபாவளி பண்டிகையின் போதும் குற்றவாளிகள் கூட்டத்துக்குள் புகுந்தால் அவர்களை அடையாளம் காணும் நவீன தொழில்நுட்பத்தையும் மாம்பலம் போலீசார் கையாண்டு வருகிறார்கள். இந்த ஆண்டும் அது போன்ற குற்றவாளிகளை அடையாளம் காண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பிக்பாக்கெட், செயின் பறிப்பு போன்ற குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களை தடுப்பதற்கு வணிகப் பகுதிகள் அனைத்திலும் சாதாரண உடையிலும் போலீசார் கண்காணித்து வருகிறார்கள்.

வருகிற 18, 19 ஆகிய தேதிகளில் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் அந்த 2 நாட்களும் தற்போது இருப்பதைவிட கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் என்று போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவின் பேரில், கூடுதல் கமிஷனர் கண்ணன் மேற்பார்வையில், தி.நகர் துணை கமிஷனர் குத்தா லிங்கம், உதவி கமிஷனர் சுரேஷ், இன்ஸ்பெக்டர் விமல் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சென்னை மாநகர பகுதியில் மட்டும் 18 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com