என்னை மன்னித்து விடுங்கள்..!- உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினரிடம் கண்கலங்கிய விஜய்

உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் சம்பந்தப்பட்டவர்களின் வங்கி கணக்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டது.வாழ்நாள் வரை உங்கள் குடும்பத்தில் ஒருவனாக இருப்பேன் என கூறியுள்ளார்.
என்னை மன்னித்து விடுங்கள்..!- உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினரிடம் கண்கலங்கிய விஜய்
Published on

கரூரில் கடந்த மாதம் 27-ந் தேதி தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பங்கேற்ற பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.

நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்தச் சம்பவத்தில், பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.20 லட்சம் நிவாரண உதவி வழங்கப்படும் என்றும், காயம் அடைந்தவர்களுக்கு ரூ.2 லட்சம் வழங்கப்படும் என்றும் விஜய் அறிவித்தார். அதன்படி உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் சம்பந்தப்பட்டவர்களின் வங்கி கணக்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அனுமதி உள்பட பல்வேறு காரணமாக பாதிக்கப்பட்டவர்களை விஜய் சந்தித்து பேசுவதில் காலதாமதம் ஏற்பட்டது. இந்த நிலையில், உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினரையும் சென்னைக்கு வரவழைத்து நேரில் சந்திக்க விஜய் முடிவு செய்தார்.

இதையடுத்து, சென்னை மாமல்லபுரத்தில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்திக்கும் வகையில் விஜயின் கட்சி நிர்வாகிகள் ஏற்பாடு செய்ததையடுத்து நேற்று இரவில் அவர்கள் மாமல்லபுரம் வந்தடைந்தனர்.

இந்நிலையில், பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்திக்கும் நிகழ்வு மாமல்லபுரத்தில் உள்ள பார் பாயிண்ட்ஸ் ஓட்டலில் நடைபெற்றது. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை தனித்தனியாக சந்தித்து விஜய் ஆறுதல் கூறினார்.

அப்போது, 41 பேரின் குடும்பத்தாரை மாமல்லபுரம் அழைத்து வந்து சந்தித்த தவெக தலைவர் விஜய் உருக்கமாக பேசியுள்ளார்.

தன்னை மன்னித்து விடுமாறு விஜய் கண்ணீர் மல்க பேசியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும்,"உங்களை மாமல்லபுரம் அழைத்து வந்ததற்கு என்னை மன்னித்து விடுங்கள், நிச்சயம் உங்களை கரூர் வந்து சந்திப்பேன்.

வாழ்நாள் வரை உங்கள் குடும்பத்தில் ஒருவனாக இருப்பேன், என்ன உதவிகள் தேவை என்றாலும் செய்து தருவேன்.

வேலைவாய்ப்பு, திருமணம், கல்வி செலவு என அனைத்தையும் தான் ஏற்றுக்கொள்வதாக பாதிக்கப்பட்டவர்களிடம் விஜய் உறுதி அளித்தார்.

மண்டபம் கிடைக்காததால் தான் தன்னால் கரூர் வர இயலவில்லை என விஜய் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com