பயணிகளே உஷார்..!- மெட்ரோ ரெயில்களில் திடீர் சோதனை நடத்த சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

மெட்ரோ ரெயில் இருக்கை விவகார் தொடர்பாக பொதுநல வழக்கு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.அபராதம் விதிப்பது உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று உத்தரவு.
பயணிகளே உஷார்..!- மெட்ரோ ரெயில்களில் திடீர் சோதனை நடத்த சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
Published on

சென்னை மெட்ரோ ரெயில்களில் முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கென ஒதுக்கப்பட்டுள்ள இருக்கைகள் அவர்களுக்குக் கிடைப்பதை உறுதி செய்ய, மெட்ரோ ரெயில் நிர்வாகத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் சில அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது.

வழக்கறிஞர் வி.பி.ஆர். மேனன் தாக்கல் செய்த பொது நல வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மெட்ரோ ரெயில்களில் முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கு எனத் தனியாக இருக்கைகள் ஒதுக்கப்பட்டிருந்தாலும், பெரும்பாலும் இளைஞர்களும் மற்ற பயணிகளும் அந்த இருக்கைகளை ஆக்கிரமித்துக் கொள்வதாகப் புகார்கள் எழுந்தன.

இது தொடர்பாகத் தொடரப்பட்ட பொதுநல வழக்கு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, மெட்ரோ ரயில்களில் அதிகாரிகள் அவ்வப்போது 'திடீர் சோதனை' நடத்த வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.

முன்னுரிமை அளிக்கப்பட வேண்டிய பயணிகளுக்கான இருக்கைகளில் மற்றவர்கள் அமர்ந்திருக்கிறார்களா என்பதை அவர்கள் கண்காணிக்க வேண்டும் என்றும், தகுதியற்ற நபர்கள் அந்த இருக்கைகளில் அமர்ந்து கொண்டு, முதியோர்களுக்கோ அல்லது மாற்றுத்திறனாளிகளுக்கோ இடம் தர மறுத்தால், அவர்கள் மீது அபராதம் விதிப்பது உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், முன்னுரிமை இருக்கைகள் யாருக்கானவை என்பது குறித்த அறிவிப்புகளை ரெயில்களுக்குள்ளும், நிலையங்களிலும் தெளிவாகத் தெரியும்படி வைக்க வேண்டும். ஒலிபெருக்கி மூலமாகவும் பயணிகளுக்குத் தொடர்ந்து அறிவுறுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரெயிலில் இருக்கும் பாதுகாப்பு ஊழியர்கள், ஒவ்வொரு நிறுத்தத்திலும் முதியோர்கள் ஏறும் போது அவர்களுக்கு இருக்கைகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும், உடல் ரீதியான சவால்களைக் கொண்டவர்களுக்கு முன்னுரிமை அளிப்பது ஒரு நாகரீகமான சமூகத்தின் கடமை என்றும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும், மெட்ரோ நிர்வாகம் இதனைச் சரியாகக் கண்காணிக்கத் தவறினால், சட்டப்படியான நடவடிக்கைகளைச் சந்திக்க நேரிடும் என்றும் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com