#FerryService நாகையில் இருந்து இலங்கைக்கு மீண்டும் தொடங்கிய பயணிகள் கப்பல் சேவை

பருவநிலை மாற்றம் காரணமாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முழுவதும் கப்பல் சேவை நிறுத்தப்பட்டது. இலங்கைக்கு படகில் செல்லலாம் என்ற மகிழ்ச்சியில் உற்சாகத்துடன் பயணிகள் புறப்பட்டனர்.
#FerryService நாகையில் இருந்து இலங்கைக்கு மீண்டும் தொடங்கிய பயணிகள் கப்பல் சேவை
Published on

நாகப்பட்டினம்:

தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு இந்தியா- இலங்கை இடையே கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 14-ந்தேதி 'செரியாபாணி' என்ற பெயரில் பயணிகள் கப்பல் சேவை தொடங்கப்பட்டது.

தொடர்ந்து, வடகிழக்கு பருவமழை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அதே மாதம் 23-ந்தேதி கப்பல் சேவை நிறுத்தப்பட்டது.

அதன் பின்னர், 'சுபம்' என்ற கப்பல் நிறுவனம் மீண்டும் நாகையில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு 'சிவகங்கை' என்ற பெயரில் கப்பல் இயக்க முடிவு செய்து, கடந்த 2024-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 16-ந்தேதி முதல் பயணிகள் கப்பல் சேவையை தொடங்கியது. வாரத்தில் சனிக்கிழமை தவிர்த்து மற்ற 6 நாட்களும் இரு மார்க்கத்திலும் கப்பல் சேவை இயக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் பருவநிலை மாற்றம் காரணமாக கடந்த ஆண்டு (2025) நவம்பர் மாதம் முழுவதும் கப்பல் சேவை நிறுத்தப்பட்டது. பின்னர், டிட்வா புயலின் தாக்கத்தால் இலங்கை காங்கேசன்துறையில் ஏற்பட்ட பாதிப்புகளை சீரமைக்கும் பணிகள் நடைபெற்றதால் தேதி குறிப்பிடாமல் கப்பல் சேவை ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில், மீண்டும் இயல்பு நிலை திரும்பியதால் இன்று முதல் கப்பல் சேவை தொடங்கியது. நீண்ட நாள்களுக்கு பிறகு தொடங்கப்பட்ட இந்த ஆண்டின் முதல் கப்பல் சேவையின் முதல் நாளில் முன்பதிவு செய்திருந்த 77 பயணிகளுடன் நாகையில் இருந்து இலங்கைக்கு கப்பல் புறப்பட்டது. இலங்கைக்கு படகில் செல்லலாம் என்ற மகிழ்ச்சியில் உற்சாகத்துடன் பயணிகள் புறப்பட்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com