Petrol Diesel தட்டுப்பாடு என வதந்தி பரப்பினால்... எண்ணெய் நிறுவன அதிகாரி எச்சரிக்கை

பெட்ரோல் பங்க்குகளில் வாகன ஓட்டிகள் அலைமோதியதை காண முடிந்தது.பெட்ரோல், டீசல் விலை உயரப் போவதாகவும் நேற்று இரவு திடீரென வதந்தி பரவியது.
Petrol Diesel தட்டுப்பாடு என வதந்தி பரப்பினால்... எண்ணெய் நிறுவன அதிகாரி எச்சரிக்கை
Published on

சென்னை:

ஈரான் போர் காரணமாக கியாஸ் தட்டுப்பாடு ஏற்பட்டுவிடக்கூடாது என்கிற அச்சத்தில் நாடு முழுவதும் ஓட்டல்களில் பயன்படுத்தப்படும் வணிக சிலிண்டர் வினியோகம் நிறுத்தப்பட்டு இருக்கிறது.

வீடுகளில் பெண்கள் சமையலுக்கு பயன்படுத்தும் சிலிண்டர் வினியோகத்தில் எந்தவித பாதிப்பும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடவடிக்கையை மேற்கொண்டு உள்ளன.

இருப்பினும் சமையல் கியாசுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டு விடுமோ என்கிற அச்சத்தில் பொதுமக்கள் போட்டிபோட்டுக் கொண்டு கியாஸ் முன்பதிவு செய்வதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

பலர் கியாஸ் ஏஜென்சிகளுக்கு நேரில் சென்று சிலிண்டர்களை வாங்குவதிலும் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

இதுபோன்ற சூழலில் பெட்ரோல்-டீசலுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் பெட்ரோல், டீசல் விலை உயரப் போவதாகவும் நேற்று இரவு திடீரென வதந்தி பரவியது.

இதன் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள பெட்ரோல் பங்க்குகளுக்கு கார் மற்றும் மோட்டார் சைக்கிள்களில் வாகன ஓட்டிகள் படையெடுக்க தொடங்கினார்கள்.

கனரக வாகனங்களை ஓட்டுபவர்களும் பெட்ரோல் பங்க்குகளுக்கு விரைந்து சென்று தங்களது வாகனங்களுக்கு டீசலையும் நிரப்பினார்கள்.

சென்னையில் கோயம்பேடு, அசோக் நகர், வடபழனி, வேப்பேரி, பெரம்பூர், மாதவரம், செங்குன்றம், புழல் என பல்வேறு பகுதிகளிலும் பெட்ரோல் பங்க்குகளில் வாகன ஓட்டிகள் அலைமோதியதை காண முடிந்தது.

பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்படப்போவதாக கேள்விப்பட்டதும் இரவு 10 மணிக்கு பிறகு வீடுகளில் நிறுத்தப்பட்டிருந்த தங்களது வாகனங்களை ஓட்டி சென்றும் பலர் தங்களது இருசக்கர வாகனங்கள், கார்கள் ஆகியவற்றின் பெட்ரோல் டேங்குகளை நிரப்பினார்கள்.

சென்னை அசோக் நகர் பகுதியில் உள்ள பெட்ரோல் நிலையத்தில் சுமார் 50 வாகனங்கள் ஒரே நேரத்தில் நீண்ட வரிசையில் நின்று பெட்ரோல் போடும் வீடியோ சமூக வலைத்தளங்களிலும் வைரலாக பரவி வருகிறது.

கடலூர், தஞ்சாவூர், கள்ளக்குறிச்சி, ஆம்பூர் ஆகிய இடங்களில் நூற்றுக்கணக்கான வாகன ஓட்டிகள் ஒரே நேரத்தில் பெட்ரோல் பங்க்குகளில் திரண்டதால் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

இதேபோன்று தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் பெட்ரோல் மற்றும் டீசலை நிரப்புவதற்காக தண்ணீர் பாட்டில்கள் மற்றும் வெள்ளை நிற எண்ணெய் கேன்கள், 25 லிட்டர் தண்ணீர் கேன்கள் ஆகியவற்றிலும் பெட்ரோல்-டீசலை நிரப்பி எடுத்துச் சென்றதையும் காண முடிந்தது.

இப்படி அனைத்து மாவட்டங்களிலுமே விடிய விடிய பெட்ரோல் பங்க்குகளில் தூக்கத்தை தொலைத்து பொதுமக்கள் தங்களது வாகனங்களுக்கு பெட்ரோல் மற்றும் டீசலை நிரப்புவதில் ஆர்வம் காட்டினார்கள்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பெட்ரோல் பங்க்குகளில் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் 4 சக்கர வாகனங்கள் மேலும் ஏராளமான பொதுமக்கள் காலி கேன்கள் மற்றும் தண்ணீர் பாட்டில்களுடன் பெட்ரோல் பங்கில் குவிந்தனர்.

செஞ்சி, திண்டிவனம், மரக்காணம், புதுச்சேரி-தமிழக எல்லை பகுதிகளான மடுகரை, மதகடிப்பட்டு போன்ற பகுதிகளிலும் வாகன ஓட்டிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து பெட்ரோல் நிரப்பி சென்றனர்.

பெட்ரோல் பங்க்குகளில் இரவு நேரங்களில் ஒன்று அல்லது இரண்டு பணியாளர்கள் மட்டுமே பணியில் இருப்பார்கள். இரவு 10 மணிக்கு பிறகு குறைந்த அளவிலான பணியாளர்களுடனே பெட்ரோல் பங்க்குகள் செயல்படுவது வழக்கம்.

ஆனால் நேற்று இரவு 10 மணிக்கு பிறகு பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அதிக அளவில் பெட்ரோல் பங்க்குகளுக்கு படையெடுத்ததால் கூடுதல் பணியாளர்களை நியமித்து பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை சுறுசுறுப்பாக நடைபெற்றது.

பெட்ரோல் டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுவிட்டதாக பரவிய தகவல் உண்மையில்லை என்றும், அது வெறும் வதந்திதான் என்றும், இதனை யாரும் நம்ப வேண்டாம் என்றும் எண்ணெய் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக இந்தியன் ஆயில் நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் பெட் ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை. போதுமான அளவு இருப்பு உள்ளது. அரசு நிறுவனங்களுக்கும் மற்றும் அனைத்துத்துறைகளுக்கும் இந்தியன் ஆயில் நிறுவன ஏஜென்சிகளுக்கும் தேவையான அளவு பெட்ரோல் டீசல் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. எனவே, பொதுமக்கள் பயப்படத் தேவையில்லை.

எனவே பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு என்ற வதந்திகளை நம்பி பெட்ரோல் பங்க்குகளுக்கு சென்று காத்திருக்க வேண்டாம். சமூக ஊடகங்களில் தவறான தகவல்களை சிலர் பரப்பி வருகிறார்கள்.

இதனால் ஒரு பதட்டமான நெருக்கடியான சூழ்நிலை ஏற்படுகிறது. அதை தவிர்க்க வேண்டும். வதந்திகளை பரப்புபவர்கள் மீது எஸ்மா சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

பொதுமக்கள் இது போன்ற வதந்திகளை நம்ப வேண்டாம். பெட்ரோல்-டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளதாக சமூக வலைதளங்களில் வதந்தி பரப்புபவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு என்று இதுவரை எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. எனவே பொதுமக்கள் தேவையான அளவிற்கு எரிபொருளை பயன்படுத்தலாம்.

சமையல் கியாசை பொறுத்தவரையில் பதிவு செய்வதில் தற்போது நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது. இன்று பதிவு செய்தால் 21 நாட்கள் கழித்துதான் சிலிண்டர் விநியோகிக்கப்படும். இன்று சமையல் கியாஸ் பெற்றவர்கள் 25 நாட்களுக்குப் பிறகுதான் புக்கிங் செய்ய முடியும்.

'ஐ.ஓ.சி.ஒன்' என்ற ஆப் மூலம் சிலிண்டருக்கு பதிவு செய்யலாம். இந்த செயலி முழுமையாக பயன்பாட்டில் உள்ளது. ஓட்டல்களுக்கு வழங்கப்படும் வணிக சிலிண்டர்கள் மட்டும் நிறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு வழங்கப்படும் சமையல் கியாஸ் சிலிண்டர் விநியோகம் செய்வதில் கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் சுமார் 2 கோடி வீடுகளுக்கு பயன்படுத்தப்படும் சமையல் கியாஸ் இணைப்புகள் உள்ளன. இதில் ஒரு கோடியே 30 லட்சம் வாடிக்கையாளர்கள் இந்தியன் ஆயில் நிறுவனத்தில் இருக்கிறார்கள். புதிய கியாஸ் இணைப்புகளுக்கு பதிவு செய்வது தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. சிலிண்டர்களை பதுக்கினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com