வருகிற 16-ந்தேதி முதல் மீண்டும் தீவிரம் அடைகிறது வடகிழக்கு பருவமழை

கடலோர மாவட்டங்கள், காவிரி டெல்டா மாவட்டங்கள், தென் மாவட்டங்களில் மழைக்கான வாய்ப்பு அதிகளவில் உள்ளது.ஓரிரு இடங்களில் மட்டும் மழைக்கான சூழல் ஏற்படும் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
வருகிற 16-ந்தேதி முதல் மீண்டும் தீவிரம் அடைகிறது வடகிழக்கு பருவமழை
Published on

சென்னை:

வடகிழக்கு பருவமழை முதல் 2 சுற்று மழை கடந்த மாதம் இறுதி வரை பெய்த நிலையில், இம்மாத தொடக்கத்தில் இருந்து பருவமழை குறைந்து காணப்படுகிறது. இடையிடையே வெப்பச்சலன மழை சற்று கைகொடுத்தாலும், இம்மாதத்துக்கான வடகிழக்கு பருவமழை இதுவரை பெய்யாத நிலையே இருந்து வந்தது.

இந்த நிலையில், தென் சீனக்கடல் பகுதியில் இருந்து கிழக்கு காற்றும், வட இந்தியாவில் இருந்து வடக்கு காற்றும் வந்து வடகிழக்கு காற்றாக 11-ந் தேதி அதாவது நாளை முழுமையாக உள்ளே வருகிறது.

இதன் காரணமாக இன்று (திங்கட்கிழமை) இரவில் இருந்தே பருவமழை பெய்யத் தொடங்க இருக்கிறது. அதிலும் நாளையும் (செவ்வாய்க்கிழமை), நாளை மறுதினமும் (புதன்கிழமை) கடலோர மாவட்டங்கள், காவிரி டெல்டா மாவட்டங்கள், தென் மாவட்டங்களில் மழைக்கான வாய்ப்பு அதிகளவில் உள்ளது.

இதனைத் தொடர்ந்து 13 முதல் 15-ந் தேதி வரை சற்று இடைவெளி ஏற்படும் என்றும், அந்த நாட்களிலெல்லாம் இரவில் பனிப்பொழிவு அதிகமாகவும், பகலில் மேகக்கூட்டங்களுடனும் வானிலை இருக்கும் எனவும், ஓரிரு இடங்களில் மட்டும் மழைக்கான சூழல் ஏற்படும் எனவும் வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து காற்றழுத்த தாழ்வுப்பகுதிகள் உருவாக வாய்ப்புள்ளது. அதன்படி, இலங்கையையொட்டி தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வுநிலை, தாழ்வுப்பகுதியாக வலுப்பெற்று, 16-ந் தேதியில் (ஞாயிற்றுக்கிழமை) இருந்து வடகிழக்கு பருவமழையை மீண்டும் தீவிரப்படுத்தும் என தனியார் வானிலை ஆய்வாளர் டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் தெரிவித்தார்.

இதனால் 16, 17-ந் தேதிகளில் காவிரி டெல்டா, தென் மாவட்டங்களிலும், 17-ந் தேதி இரவில் இருந்து 19-ந் தேதி வரை சென்னை முதல் கன்னியாகுமரி வரையிலான கடலோர மாவட்டங்கள், உள்மாவட்டங்களிலும் மழையை எதிர்பார்க்கலாம் எனவும் அவர் கூறி உள்ளார்.

20-ந் தேதிக்கு பிறகு தாழ்வுப்பகுதி அடுத்தடுத்து தமிழக கடற்கரை பகுதிகளை நோக்கி வருகிறது. இதில் 21-ந் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறவும், 25-ந் தேதிக்கு பின் உருவாகும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி, புயலாக வலுவடையவும் வாய்ப்பு உள்ளதாகவும், இதன்படி, இம்மாத இறுதி வரை தமிழ்நாட்டில் பரவலாக மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வாளர் கூறியிருக்கிறார். அதன் பின்னரும் அதாவது, டிசம்பர் மாதம் முதல் பாதி வரை நல்ல மழைக்கான சூழல் இருப்பதாகவே சொல்லப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com