'எஸ்மா சட்டத்தைத் திணிக்கும் மோடி அரசு' - திருமாவளவன் கண்டனம்

மக்களுக்கு உதவும் இடைக்கால நடவடிக்கைகளை ஒன்றிய அரசு எடுக்கவேண்டும்.நிதிச்சுமையை வழக்கம்போல மாநிலங்களின் தலையில் கட்டாமல் 'பிஎம் கேர்ஸ்' நிதியிலிருந்து கொடுக்க வேண்டும்
'எஸ்மா சட்டத்தைத் திணிக்கும் மோடி அரசு' - திருமாவளவன் கண்டனம்
Published on

மத்திய அரசு எஸ்மா சட்டத்தை திணிப்பதாக விசிக தலைவர் திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ளப் பதிவில்,

"ஈரான் நாட்டை அமெரிக்காவும், இஸ்ரேலும் தாக்கத் தொடங்கியதன் காரணமாக வளைகுடா நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வரும் எரிவாயு, கச்சா எண்ணெய் முதலானவை வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இந்தியா முழுவதும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. உணவகங்கள் மூடப்படுகின்றன. சூழ்நிலையை முன்னுணர்ந்து முன்னெச்சரிக்கையான நடவடிக்கைகளை எடுக்காமல் இந்திய ஒன்றிய அரசு மெத்தனமாக இருந்ததே இதற்கு காரணம்.

பொதுமக்களின் நலன்களில் அக்கறை செலுத்தாமல், அரசியல் பொறுப்புணர்வோடு செயல்படாத ஒன்றிய பாஜக அரசின் போக்கை மிக வன்மையாகக் கண்டிக்கிறோம். சமையல் எரிவாயு தட்டுப்பாடின்றிக் கிடைப்பதற்கு உடனடியாக போர்க்கால நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.  

ஈரான் நாட்டை அமெரிக்க-இஸ்ரேலியப் படைகள் தாக்குவதற்கான தயாரிப்புகளை செய்து கொண்டிருந்தபோதே, இந்தியாவில் கச்சா எண்ணெய், சமையல் எரிவாயு மற்றும் தொழிற்சாலைகளுக்கான எரிவாயு போற்றவற்றுக்குத் தட்டுப்பாடு ஏற்படும் என்று பலரும் எச்சரித்தனர். ஆனால், அந்த எச்சரிக்கைகளை மதிக்காமல் மோடி அரசு அலட்சியமாக இருந்தது. இப்போது வளைகுடா நாடுகளில் இருந்து எண்ணெய், எரிவாயு விநியோகம் முற்றிலுமாகத் தடை செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் என்ன செய்வதென்று தெரியாமல் 'எஸ்மா சட்டத்தை' ஒன்றிய பாஜக அரசு பிறப்பித்துள்ளது. நாடு முழுவதும் உணவகங்கள் மூடப்படுகின்றன. மாணவர் விடுதிகளில் உணவு வழங்கமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

வீடுகளுக்கான சமையல் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. 'சில வாரங்களுக்கு கையிருப்பு உள்ளது' என்று ஒன்றிய அரசு சொன்னாலும் பெரும்பாலான மாநிலங்களில் சிலிண்டர் விநியோகம் செய்ய முடியவில்லை. மக்கள் சமைத்து சாப்பிடுவதற்கே திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது. உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கச் சொல்லியிருக்கிறோம் என்று மோடி அரசு சொன்னாலும் அது உடனடியாக நடக்கப் போவதில்லை. இந்தக் குழப்பங்களுக்கு மோடி அரசின் கையாலாகத்தனமே காரணம்.

கொரோனா வந்த போதும், ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்ட போதும் இதே போலத்தான் எந்த முன்னெச்சரிக்கையும் இல்லாமல் மோடி அரசு நடந்து கொண்டது. அதனால் கொரோனாவின்போது இலட்சக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்பட்டன. இப்போதும் மோடி அரசு அதே போலத்தான் நடந்து கொள்கிறது.

நாட்டுக்கு எந்தவொரு நெருக்கடி வந்தாலும் மக்களைக் காப்பாற்ற வேண்டும் என்ற அக்கறை இல்லாமல் தனது கார்ப்பரேட் கூட்டாளிகளுக்கு அதில் எவ்வளவு லாபம் பார்க்கலாம் என்ற விதத்திலேயே மோடி அரசு செயல்படுகிறது. இப்போதும் கூட அமெரிக்காவில் எண்ணெய் சுத்திகரிப்பு செய்ய மோடியின் கூட்டாளி அம்பானிக்கு லைசன்ஸ் கொடுக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்காவை நெருக்கடியிலிருந்து காப்பாற்றுவதற்கு அம்பானிக்கு உதவும் மோடி அரசு இந்திய மக்களைப் பற்றி கொஞ்சமும் கவலைப்படவில்லை.

எஸ்மா சட்டம் பிறப்பிக்கப்பட்டதாலே எரிவாயு விநியோகம் முறையாக நடந்து விடும் என்று நம்புவதற்கு இல்லை. எஸ்மா சட்டத்தையும் தவறாகப் பயன்படுத்தவே மோடி அரசு முயற்சிக்கும். எனவே இப்படி நாடகமாடி மக்களை ஏய்ப்பதை நிறுத்திக்கொண்டு உருப்படியாக மக்களுக்கு உதவுவது எப்படி என ஒன்றிய அரசு சிந்திக்க வேண்டும்.

போர் முடிந்தாலும்கூட எரிவாயு விநியோகம் சீரடைய பல மாதங்கள் பிடிக்கலாம். எனவே, மக்களுக்கு உதவும் இடைக்கால நடவடிக்கைகளை ஒன்றிய அரசு எடுக்கவேண்டும். மின்சார அடுப்புகளை மானிய விலையில் கிடைக்கச் செய்யவேண்டும். கிராமப்புற மக்களுக்குக் கூடுதலாக மாதம் 10லிட்டர் மண்ணெண்ணெய் இலவசமாக வழங்கவேண்டும். சோலார் மின்வசதி ஏற்படுத்திக்கொள்ள உணவகங்களுக்கு மானியம் வழங்கவேண்டும்.

தேவையான இடங்களில் மையப்படுத்தப்பட்ட சமையல்கூட வசதியை உருவாக்கி இலவசமாக உணவு வழங்கவேண்டும். இவற்றுக்கான நிதிச்சுமையை வழக்கம்போல மாநிலங்களின் தலையில் கட்டாமல் எவருக்கும் தெரியாமல் ஒளித்து வைத்திருக்கும் 'பிஎம் கேர்ஸ்' நிதியிலிருந்து கொடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்." எனக் குறிப்பிட்டுள்ளார். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com