உயர்கல்வியிலும் இடைநிற்றல் இல்லாமல் இருக்க நடவடிக்கை- அமைச்சர் கோவி.செழியன்

கல்லணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவதற்கான தேதியை அரசு அறிவிக்கும்.கல்லூரிகளில் ராகிங் கொடுமையை தடுக்க சிறப்பு கண்காணிப்பு குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
உயர்கல்வியிலும் இடைநிற்றல் இல்லாமல் இருக்க நடவடிக்கை- அமைச்சர் கோவி.செழியன்
Published on

தஞ்சாவூர்:

தஞ்சைக்கு வருகிற 15,16 ஆகிய தேதிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கருணாநிதி சிலை திறப்பு, கட்சி நிர்வாகிகள் சந்திப்பு, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.

இந்த நிலையில் இன்று தஞ்சை பழைய பஸ் நிலையத்தில் முதலமைச்சரை வரவேற்கும் விதமாக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் தலைமையில் ராட்சத பலூன் பறக்க விடப்பட்டன.

பின்னர் அமைச்சர் கோவி.செழியன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது :-

முதலமைச்சர் தஞ்சை வருகையை முன்னிட்டு மத்திய, தெற்கு, வடக்கு மாவட்டங்கள் சார்பில் சிறப்பான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. தஞ்சை மாவட்டமே விழாக்கோலம் பூண்டுள்ளது. அதன் ஒருபகுதியாக முதலமைச்சரை வரவேற்கும் விதமாக இன்று தஞ்சை பழைய பஸ் நிலையத்தில் ராட்சத பலூன் பறக்க விடப்பட்டது. மொத்தம் தஞ்சை மாநகரில் 3 இடங்களில் ராட்சத பலூன்கள் பறக்க விடப்பட்டுள்ளன.

மேட்டூர் அணையில் இருந்து இன்று முதலமைச்சர் தண்ணீர் திறந்து விட்டுள்ளார். டெல்டா மாவட்டங்களில் விதைநெல், இடுபொருட்கள் மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது. தட்டுபாடின்றி கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2 மாதத்திற்கு முன்பாகவே ஆறு, குளம், வாய்க்கால்கள் தூர்வாருவது குறித்து முடிவு செய்யப்பட்டு தூர்வாரப்பட்டன. கடைக்கோடி வரை தண்ணீர் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கல்லணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவதற்கான தேதியை அரசு அறிவிக்கும்.

கல்லூரிகளில் ராகிங் கொடுமையை தடுக்க சிறப்பு கண்காணிப்பு குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. கல்லூரி முதல்வர், துறை தலைவர்கள், மாணவர் பிரதிநிதிகள், பெற்றோர் சங்க நிர்வாகிகள் என ஐவர் அல்லது ஏழு பேர் கொண்ட கண்காணிப்பு குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த குழுவினர் மாணவர்கள் கல்லூரி வருவது முதல் கல்லூரி முடிந்து வீட்டுக்கு செல்வது வரை கண்காணிப்பர். மேலும் கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணிக்கப்படுகிறது. எனவே பள்ளி, கல்லூரிகளில் ராகிங் குற்றம் நடைபெறா வண்ணம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முதலாம் ஆண்டு டிப்ளமோ முடித்தவர்கள் பொறியியலில் சேர்ந்து படிக்க வேண்டும் என்பது தொடர்ந்து வந்த கோரிக்கை. அதனை தடையில்லாமல் நிறைவேற்றி வருகிறோம். கடந்த 4, 5 ஆண்டுகளில் தேர்வு எழுத முடியாமல் விடுப்பட்ட மாணவர்களும் தொடர்ந்து படிக்கும் விதமாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இடைநிற்றல் என்பது தொழில்கல்வி, ஐ.டி.ஐ, பாலிடெக்னிக்கிலும் இருக்க கூடாது என்பதற்காகவும், இடைநிற்றல் இல்லாத தொழில்கல்வி இருக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் அறிவுறுத்தி உள்ளார். அதன் அடிப்படையில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இதன் மூலம் இடைநிற்றல் என்பது உயர்கல்வியிலும் இல்லை என்ற நிலையை அடைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com