பா.ம.க. பொதுக்குழு வழக்கு- தந்தை, மகனுக்கு அழைப்பு விடுத்த நீதிபதி

கட்சியின் பொதுக்குழு, அவசர பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தை கூட்ட கட்சியின் நிறுவனருக்கே அதிகாரம் உள்ளது.அன்புமணியின் பொதுக்குழு கூட்டம் அறிவிப்பால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்ட வாய்ப்புள்ளதாக ராமதாஸ் தரப்பில் வாதிடப்பட்டது.
பா.ம.க. பொதுக்குழு வழக்கு- தந்தை, மகனுக்கு அழைப்பு விடுத்த நீதிபதி
Published on

சென்னை:

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஆதரவு மாநில பொதுச்செயலாளர் முரளி சங்கர் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில், "கடந்த 2022-ம் ஆண்டு மே மாதம் கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்ட அன்புமணியின் பதவிக்காலம் கடந்த மே மாதம் 28-ந்தேதியுடன் நிறைவடைந்து விட்டது.

கட்சியின் பொதுக்குழு, அவசர பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தை கூட்ட கட்சியின் நிறுவனருக்கே அதிகாரம் உள்ளது.

தன்னைத்தானே தலைவர் என சொல்லிக்கொண்டு அன்புமணி செயல்படுகிறார். அவர் வருகிற 9-ந்தேதி கூட்டும் பொதுக்குழுவுக்கு தடை விதிக்கவேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க கோரி நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு முறையீடு செய்யப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இந்த வழக்கை நாளை (இன்று) விசாரிப்பதாக கூறினார்.

இதையடுத்து இன்று இவ்வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கேடஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் அன்புமணி பொதுக்குழு கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். மேலும் அன்புமணியின் பொதுக்குழு கூட்டம் அறிவிப்பால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்ட வாய்ப்புள்ளதாக ராமதாஸ் தரப்பில் வாதிடப்பட்டது.

இதனை தொடர்ந்து, 5 நிமிடத்தில் இந்த வழக்கை என்னால் முடித்துவிட முடியும். இருப்பினும் இருதரப்பு நலன் கருதி இன்று மாலை 5.30 மணிக்கு இருவரையும் நீதிபதி அறைக்கு அழைத்து வரமுடியுமா? இதை வேண்டுகோளாக வைக்கிறேன் என்று கூறிய உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்டேஷ், வழக்கை ஒத்திவைத்தார். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com