அரசியலிலும், இலக்கியத்திலும் செல்வராகத் திகழ்ந்த குமரி அனந்தன் வாழ்க்கை வரலாறு

அரசியல் வாசம் தன்னை கவர்ந்திழுக்க, அகில இந்திய காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார், குமரி அனந்தன்.'இலக்கியச் செல்வர்' என்று புகழப்பட்ட குமரி அனந்தன், தமிழ் இலக்கியத்தில் வித்தகராக விளங்கினார்.
அரசியலிலும், இலக்கியத்திலும் செல்வராகத் திகழ்ந்த குமரி அனந்தன் வாழ்க்கை வரலாறு
Published on

கன்னியாகுமரி மாவட்டம் அகத்தீஸ்வரத்தில் மார்ச் 19, 1933-ல் பிறந்தவர் குமரி அனந்தன். சுதந்திரப் போராட்ட தியாகி ஹரிகிருஷ்ணன் மற்றும் தங்கம்மாள் தம்பதிக்கு மகனாகப் பிறந்த இவரது இயற்பெயர் அனந்தகிருஷ்ணன். இதுவே பின்னாட்களில் குமரி அனந்தன் என்றானது. தமிழ்மீது ஆர்வம் கொண்ட குமரி அனந்தன், தமிழில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டம் பெற்றார்.

கிருஷ்ணகுமாரி என்பவரை துணைவியாகக் கொண்ட இவருக்கு 4 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இவர்களில் தமிழிசை சவுந்தரராஜன், இன்று டாக்டர், அரசியல்வாதி, தெலுங்கானா கவர்னர், புதுச்சேரி துணைநிலை கவர்னர் என பன்முகத் தன்மை கொண்டு பணியாற்றி வருகிறார்.

அரசியல் வாசம் தன்னை கவர்ந்திழுக்க, அகில இந்திய காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார், குமரி அனந்தன். 1977 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் நாகர்கோவில் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

முன்னதாக பெருந்தலைவர் காமராசர் போட்டியிட்ட தொகுதி என்பதால், அதனை தன்வசப்படுத்திய மகிழ்ச்சியுடன் நாடாளுமன்றத்தில் கால்பதித்தார். நாடாளுமன்றத்தில் தமிழ் மொழியில் கேள்விகளை கேட்டு, இந்திய மொழிகள் அனைத்தும் ஆட்சியாளர்களின் அவையில் ஒலிக்க வேண்டும் என்று உரக்க குரல் எழுப்பினார்.

'காந்தி காமராஜ் காங்கிரஸ் கட்சி' என்ற புதிய கட்சியை தொடங்கிய இவர், 1980 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திருவொற்றியூர் தொகுதியில் அக்கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றார். தொடர்ந்து 1984 சட்டமன்ற தேர்தலிலும் வெற்றி அவர் வசமே நின்றது.

தமிழ்நாடு அரசு சார்பில் தகைசால் விருது
தமிழ்நாடு அரசு சார்பில் தகைசால் விருது

தமிழ்நாடு அரசு சார்பில் தகைசால் விருது

இதையடுத்து தன்னுடைய காந்தி காமராஜ் காங்கிரஸ் கட்சியை, காங்கிரஸ் கட்சியுடன் இணைத்த குமரி அனந்தன், 1989 மற்றும் 1991 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தல்களில், அகில இந்திய காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு மீண்டும் வெற்றிக் கனிகளை சுவைத்தார்.

பின்னர் முழுமையாக காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்ட குமரி அனந்தன், 1996 ஆம் ஆண்டு அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து 1996 மற்றும் 1998 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல்கள் அவருக்கானதாக அமையவில்லை. இரண்டு தேர்தல்களிலும் தோல்வியே அவரை வந்து தழுவியது. இருப்பினும் தொடர்ந்து அரசியல் பணியையும், மக்கள் பணியையும் சிறப்பாக மேற்கொண்டு வந்தார்.

குமரி அனந்தன் 5 முறை தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தேடுக்கப்பட்டவராவார். மொத்தம் 19 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.

'இலக்கியச் செல்வர்' என்று புகழப்பட்ட குமரி அனந்தன், தமிழ் இலக்கியத்தில் வித்தகராக விளங்கினார். கலித்தொகை இன்பம், படித்தேன், கொடுத்தேன், நல்லாட்சி தந்த நாயகன் காமராஜ் உள்ளிட்ட 25-க்கும் அதிகமான நூல்களை இயற்றியுள்ளார்.

பனை மரத்தை பாதுகாக்க வேண்டும், தருமபுரியில் பாரத மாதாவுக்கு கோவில் கட்ட வேண்டும், நதிகளை இணைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு மக்களின் கோரிக்கைகளை முன்னிறுத்தி பாதயாத்திரைகளும் இவர் மேற்கொண்டுள்ளார்.

அரசியலில் பின்னடைவுகளை சந்தித்த போதிலும், மனம் தளராமல் தொடர்ந்து மக்கள் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட இவரது வாழ்க்கை பயணம், அரசியலில் கால்பதிக்கும் புதியவர்களுக்கு ஒரு சிறந்த வழிகாட்டியாய் அமையும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

மறைந்த குமரி அனந்தனுக்கு , 2024ம் ஆண்டு தமிழ்நாடு அரசு சார்பில் தகைசால் விருது வழங்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com