கச்சத்தீவை இந்தியாவுக்கு ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டோம்- விஜய்க்கு இலங்கை மந்திரி பதிலடி

கச்சத்தீவு என்பது இலங்கைக்கு சொந்தமான தீவு.அரசியல் மேடைகளில் பேசப்படும் கருத்துகளை நாம் பொருட்படுத்த வேண்டாம்.
கச்சத்தீவை இந்தியாவுக்கு ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டோம்-  விஜய்க்கு இலங்கை மந்திரி பதிலடி
Published on

சென்னை:

தமிழக வெற்றிக்கழக 2-வது மாநில மாநாடு மதுரையில் கடந்த 21-ந்தேதி நடைபெற்றது. இந்த மாநாட்டில் பேசிய தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய், "தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தொடர்ந்து தாக்குதலுக்கு ஆளாகி வருகிறார்கள். அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வாக, மத்திய அரசு கச்சத்தீவை மட்டும் மீட்டுக்கொடுங்கள்" என்று பேசியிருந்தார்.

இந்த நிலையில் இலங்கை வெளியுறவு துறை மந்திரி விஜித ஹேரத் கொழும்புவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம், தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் கச்சத்தீவை மீட்டு கொடுங்கள் என்று பேசியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு விஜித ஹேரத் கூறியதாவது:-

முதலாவதாக கச்சத்தீவு என்பது இலங்கைக்கு சொந்தமான தீவு ஆகும். அது ஒருபோதும் மாறப்போவதில்லை. தென்னிந்தியாவில் இப்போது தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. தேர்தல் மேடைகளில் வேட்பாளர்கள் வாக்குறுதிகளை அளிப்பதற்கு ஒவ்வொரு விஷயங்களையும் கூறுவார்கள். அப்படித்தான் கச்சத்தீவு பற்றி கூறுகிறார்கள். கச்சத்தீவு குறித்து அவர்கள் பேசுவது இது முதல்முறை அல்ல.

இதேபோல பலமுறை தேர்தல் மேடைகளில் கச்சத்தீவு விவகாரத்தை பேசியுள்ளனர். தேர்தல் மேடைகளில் கூறுவதால் இங்கு எதுவும் மாறப்போவதில்லை. கச்சத்தீவு குறித்து நடிகர் விஜய் தேர்தல் மேடை ஒன்றில் பேசியதை பார்த்தேன். அதனை பெரிதுபடுத்த வேண்டிய அவசியமில்லை.

இலங்கை அரசாங்கத்தினால் ராஜதந்திர ரீதியாக எவ்வித மாற்றமும் நடைபெறவில்லை. அதனால் இன்றும், நாளையும், என்றும் கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமான தீவுதான். எந்த ஒரு ராஜதந்திர செயல்பாடுகளுக்காகவும் கச்சத்தீவை இந்தியாவுக்கு நாங்கள் வழங்க மாட்டோம் என்று தெளிவாக கூறுகின்றேன். இந்திய அரசு மட்டத்தில் இருந்து யாராவது கருத்து தெரிவித்தால், அவர்கள் பேச்சு குறித்து கவனம் செலுத்தலாம்.

எனவே அரசியல் மேடைகளில் பேசப்படும் கருத்துகளை நாம் பொருட்படுத்த வேண்டாம். கச்சத்தீவை இந்தியாவுக்கு நாம் ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com