காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பு- ரத்த மாதிரிகளை சேகரித்து ஆய்வு மேற்கொள்ளும் சுகாதாரத்துறை

பொது இடங்களுக்கு செல்லும்போது கர்ப்பிணி பெண்கள், வயதானவர்கள் முககவசம் அணிந்து செல்ல சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.38 மாவட்டங்களில் 10 முதல் 20 ரத்த மாதிரிகளை எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.
காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பு- ரத்த மாதிரிகளை சேகரித்து ஆய்வு மேற்கொள்ளும் சுகாதாரத்துறை
Published on

தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக காய்ச்சல் பாதிப்பு அதிகமாகி வருகிறது. இதனால், அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற வருவோரின் எண்ணிக்கை அதிகரித்தவாறு இருக்கிறது. சென்னையில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் நாள்தோறும் 500-க்கும் மேற்பட்டோர் காய்ச்சல் பாதித்து சிகிச்சைக்காக வருகிறார்கள்.

காய்ச்சலுடன் சேர்ந்து உடல் சோர்வு, வறட்டு இருமல், தொண்டை வலி, சளி ஆகிய பாதிப்புகளும் காணப்படுகிறது. காய்ச்சல் பாதிப்புக்கு ஆளாகும் நபர்களில் இன்புளூயன்சா வைரஸ் பாதிப்பே அதிகம் காணப்படுவதாக டாக்டர்கள் கூறுகிறார்கள். இன்புளூயன்சா வைரசால் பாதிக்கப்பட்ட ஒருவரின் இருமல், தும்மல் மூலம் அருகில் உள்ளவர்களுக்கு பரவுகிறது.

இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொது இடங்களுக்கு செல்லும்போது கர்ப்பிணி பெண்கள், வயதானவர்கள் இணை நோய் உள்ளவர்கள் முககவசம் அணிந்து செல்வது நல்லது என பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில் 38 மாவட்டங்களில் இன்றும், நாளையும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்டத் தலைமை மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், வட்டார மருத்துவமனைகள் ஆகியவற்றில் காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்களின் ரத்த மாதிரிகளை எடுத்து சுகாதாரத்துறை ஆய்வு செய்ய உள்ளது.

ஏற்கெனவே தமிழ்நாட்டில் பரவி வருவது இன்புளூயன்சா ஏ வகை தொற்று என்று உறுதி செய்யப்பட்ட நிலையில் வேறு எதுவும் தொற்று பாதிப்புகள் உள்ளதா என்பதை கண்காணிப்பதற்காக இந்த ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.

38 மாவட்டங்களில் 10 முதல் 20 ரத்த மாதிரிகளை எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. மொத்தமாக 450-க்கும் மேற்பட்ட மாதிரிகளை எடுத்து ஆய்வு சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com