நிதி நிறுவன மோசடியில் பாதிக்கப்படுபவர்கள் ஏழை மற்றும் படிப்பறிவு இல்லாத பொதுமக்கள்தான் - ஐகோர்ட் மதுரை கிளை

நிதி நிறுவனங்கள் நடத்தி மோசடியில் ஈடுபடுவது ஒவ்வொரு வருடமும் அதிகரித்து வருகிறது. போலீசார் தாக்கல் செய்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள புள்ளி விவரங்களை பார்க்கும்போது 39 சதவீத சொத்துக்கள் மட்டுமே பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
நிதி நிறுவன மோசடியில் பாதிக்கப்படுபவர்கள் ஏழை மற்றும் படிப்பறிவு இல்லாத பொதுமக்கள்தான் - ஐகோர்ட் மதுரை கிளை
Published on

மதுரை:

கோவையைச் சேர்ந்த ரவிச்சந்திரன், மதுரை ஐகோர்ட்டில் கடந்த 2023 ஆண்டு தக்கல் செய்த மனுவில் கூறி இருந்ததாவது:-

மதுரையை தலைமையிடமாக கொண்டு அப்சல் தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டது. இந்த நிறுவனத்தினரின் ஆசை வார்த்தையை நம்பி, நான் உள்பட ஏராளமானவர்கள் பல கோடி ரூபாயை முதலீடு செய்திருந்தோம். எங்கள் பணத்தை அந்த நிறுவனம் மோசடி செய்தது. இதுகுறித்து புகார் அளித்ததால் 2017-ல் மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்நிலையில் முதலீடு செய்து ஏமாந்த முதலீட்டாளர்கள் தொகையை திரும்ப பெற்றுத்தர ஓய்வு பெற்ற நீதிபதி சுதந்திரம் தலைமையில் பொருளாதார குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர், அப்சல் நிறுவன மேலாளர் ஆகியோர் அடங்கிய குழுவை உயர் நீதிமன்றம் நியமித்தது.

அந்த குழு, நிதி நிறுவனத்தின் சொத்துகளை மீட்க பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டும் எந்த முன்னேற்றமும் இல்லை. நிறுவனத்தினர் இதற்கு ஒத்துழைக்கவும் இல்லை. இதற்கிடையே அப்சல் நிறுவன நிர்வாகி செந்தில்வேல் இறந்துவிட்டார். நிதி நிறுவன மோசடியில் ஈடுபட்டவர்களை கைது செய்யவோ, வழக்கில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யவோ போலீசார் கடந்த 5 ஆண்டுகளாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்த மோசடியில் ஈடுபட்டவர்கள் தப்பிக்க போலீசார் உடந்தையாக உள்ளனர். குற்றவாளிகள் சுதந்திரமாக நடமாடுவதற்கு உதவியாகவும் போலீசார் உள்ளனர். எனவே அப்சல் நிதி நிறுவன மோசடி வழக்கை வேறு விசாரணை அமைப்புக்கு மாற்ற வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனுவை நீதிபதி புகழேந்தி விசாரித்தார். இதற்கிடையே போலீசார் தாக்கல் செய்த அறிக்கையில் கூறியிருந்ததாவது:-

தமிழகத்தில் இதுவரை நிதி நிறுவன மோசடி பிரிவின் கீழ் 1,249 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதில் 6,90,166 நபர்கள் முதலீடு செய்துள்ளனர். இதற்காக இதுவரை 366 அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. சுமார் 827 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் வழக்கில் இணைக்கப்பட்டு உள்ளது.

பொருளாதார குற்றப்பிரிவு நீதிமன்றத்தில் சுமார் ரூ.50 கோடியே 71 லட்சம் வைப்புத் தொகையாக வைக்கப்பட்டுள்ளது. மாவட்ட வருவாய் அலுவலர் மூலம் 373 கோடி ரூபாய் வைப்புத்தொகை வைக்கப்பட்டுள்ளது. இதில் 264 கோடி ரூபாய் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திரும்ப கொடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது.

முடிவில் நீதிபதி பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க ஏற்கனவே ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து விசாரணையை முடிக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. ஆனால் குற்றவாளிகள் போதிய ஒத்துழைப்பு தரவில்லை. 7 ஆண்டுகளாக குளிர்சாதன பெட்டியில் வைக்கப்பட்டது போல இந்த வழக்கு உள்ளது. இனியும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கூறும் காரணங்களை ஏற்க முடியாது.

போலீசார் தாக்கல் செய்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள புள்ளி விவரங்களை பார்க்கும்போது 39 சதவீத சொத்துக்கள் மட்டுமே பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் நிதி நிறுவனங்கள் நடத்தி மோசடியில் ஈடுபடுவது ஒவ்வொரு வருடமும் அதிகரித்து வருகிறது. இதில் பாதிக்கப்படுபவர்கள் ஏழை மற்றும் படிப்பறிவு இல்லாத பொதுமக்கள் தான்.

எனவே அரசு இந்த விவகாரங்களை எளிதாக்க ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி மற்றும் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி தலைமையில் குழு அமைத்தால் மோசடியில் ஈடுபட்ட நிதி நிறுவனங்களிடமிருந்து சொத்துக்களை மீட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கும் நடவடிக்கை விரிவுபடுத்தப்படும்.

பொருளாதார மோசடியில் சிக்கியவர்கள் எவ்வளவு பெரிய உயர்ந்த பொறுப்பில் இருந்தாலும் அவர்கள் பொருளாதார குற்றப்பிரிவு விசாரணையை நம்பி தான் உள்ளனர். எனவே இந்த வழக்கை ஆறு மாதத்தில் விசாரணை செய்து முடிக்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com