

வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் தொடங்கிய நிலையில், இந்த மாதத்தில் பருவமழை சற்று இடைவெளியைக் கொடுத்தது. தற்போது மீண்டும் வடகிழக்கு பருவகாற்று முழுவதுமாக தமிழகத்தில் வீசத் தொடங்கியுள்ளது.
இதன் தொடர்ச்சியாக தென் இலங்கை மற்றும் அதனையொட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, நேற்று இலங்கை கடலோரப் பகுதிகளையொட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உருவாகியுள்ளது. இது இன்று மேற்கு-வடமேற்கு திசையில் நகரும் என ஆய்வு மையம் கணித்திருக்கிறது.
இதன் காரணமாக இன்று முதல் வருகிற 19-ந்தேதி வரை தமிழ்நாட்டில் மழைக்கான வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, இன்று கடலோர மாவட்டங்களில் சில இடங்களிலும், உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் மிதமான மழையும், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய 4 மாவட்டங்களிலும் மற்றும் காரைக்காலிலும் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரியிலும் கனமழை பெய்யக்கூடும்.
நாளை கடலோர மாவட்டங்களில் அனேக இடங்களிலும், உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் இடி மின்னலுடன் மிதமான மழையும், காஞ்சிபுரம், விழுப்புரம், செங்கல்பட்டு, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரியிலும் கன முதல் மிக கனமழையும், சென்னை, திருவள்ளூர், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் காரைக்காலிலும் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்திற்கு நாளை கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதையடுத்து அரசு ஊழியர்கள் விடுமுறை எடுக்காமல் பணியாற்ற அம்மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.
கனமழை எச்சரிக்கை காரணமாக நாளை வருவாய், கூட்டுறவு, பொதுப்பணி, மின்வாரியம் உள்ளிட்ட துறைகளின் அரசு ஊழியர்கள் விடுமுறை எடுக்காமல் பணியாற்ற வேண்டும். திருவாரூர் மாவட்டத்தில் கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் உடனடியாக கரை திரும்ப வேண்டும் என்று அவர் உத்தரவிட்டுள்ளார்.