'கல்லூரிக்குப் போவதாகத்தான் சொன்னான்' - விஜய்யை காணசென்று விபத்து... மாணவரின் தந்தை கண்ணீர் மல்க பேட்டி

கல்லூரி சென்று, பின்னர் விஜய்யை பார்ப்பதற்காக வந்துள்ளார். இன்று விக்னேஷ் மட்டுமின்ற வெவ்வேறு இடங்களில் மொத்தமாக ஐந்துபேர் காயமடைந்துள்ளனர்.
'கல்லூரிக்குப் போவதாகத்தான் சொன்னான்' - விஜய்யை காணசென்று விபத்து... மாணவரின் தந்தை கண்ணீர் மல்க பேட்டி
Published on

தஞ்சாவூரில் இன்று தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் வாகனத்தைப் பின்தொடர்ந்து சென்று, விபத்தில் சிக்கி திருச்சியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்றும், கல்லூரிக்கு செல்வதாகவே கூறிவிட்டு விக்னேஷ் சென்றதாகவும், கல்லூரி தரப்பிலிருந்து தனக்கு எதுவும் தெரிவிக்கப்படவில்லை எனவும் விபத்துக்குள்ளான மாணவனின் தந்தை கண்ணீர்மல்க பேட்டியளித்துள்ளார். 

இதுதொடர்பாக பேசிய அவர், 

"எனக்கு இரட்டை பிள்ளைகள். குமரேஷ், விக்னேஷ். இதில் விக்னேஷிற்குத்தான் அடிப்பட்டுள்ளது. காலையில் பேட்டரி வாகனத்தைதான் கொடுத்து அனுப்பினேன். கல்லூரி செல்வதாக கூறிவிட்டு நண்பனோடு வேறு வண்டியில் இங்கு வந்துள்ளார். எனக்கு 11.30 மணிக்குதான் தெரியும் அடிப்பட்டது.

தலையில் ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளது. காலில் எலும்பு முறிந்துள்ளது எனக் கூறுகிறார்கள். 48 மணிநேரம் ஆகும் எனக் கூறுகிறார்கள். மற்றொரு பையனுக்கு (அருண்) முதுகில் அடிப்பட்டுள்ளது. நான் பால்வியாபாரம் செய்கிறேன். கல்லூரியிலிருந்து வந்துள்ளனர்." என தெரிவித்தார். 

தஞ்சாவூரின் செங்கிப்பட்டி அருகேயுள்ள அய்யாசாமப்பட்டியில் இன்று தவெக தேர்தல் பரப்புரை மற்றும் கட்சி நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொள்வதற்காக அக்கட்சியின் தலைவர் விஜய், இன்று திருச்சி விமான நிலையத்தில் இருந்து தஞ்சாவூர் சென்றார். அப்போது விஜய்யின் வாகனத்தை ரசிகர்கள் பலர் இருசக்கர வாகனங்களில் பின்தொடர்ந்தனர்.

திருச்சி - தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் புதுக்குடி அருகே சென்றபோது, விக்னேஷ் ஓட்டிச் சென்ற பைக், பின்னால் வந்தவர்கள் மோதியதில் முன்னால் சென்ற கார் மீது மோதியது. இதில் விக்னேஷும், பைக்கில் அவருடன் வந்த அவரது நண்பர் அருணும் காயமடைந்தனர். 

தலையில் பலத்த காயமடைந்த விக்னேஷ் உயிருக்கு ஆபத்தான நிலையில் தற்போது தஞ்சாவூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அருணுக்கு முதுகில் அடிப்பட்டுள்ளதால் இன்றே அறுவை சிகிச்சை செய்யவேண்டும் என மருத்துவர்கள் தெரிவத்துள்ளனர். இவர்கள் மட்டுமின்றி விஜய்யின் வாகனத்தைத் துரத்திச் சென்ற வெவ்வேறு இடங்களில் நிகழ்ந்த விபத்துகளில் மொத்தம் 5 பேர் காயமடைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com