சி.பி.ஐ. விசாரணை மீது பொதுமக்கள் நம்பிக்கை இழந்து விட்டனர்- உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து

சி.பி.ஐ. விசாரணை அதிகாரிகள் தேவையான அனைத்து அறிவியல் பூர்வமான தொழில்நுட்பங்களை அறிந்திருக்க வேண்டும். 8 பேருக்கு விசாரணை நீதிமன்றம் விதித்த தண்டனை ரத்து செய்யப்படுகிறது.
சி.பி.ஐ. விசாரணை மீது பொதுமக்கள் நம்பிக்கை இழந்து விட்டனர்- உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து
Published on

மதுரை:

நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள அரசுடமையாக்கப்பட்ட வங்கியில் போலியான நபர்களுக்கு வங்கிக் கடன் வழங்கி ரூ. 2 கோடி இழப்பீடு ஏற்படுத்திய வழக்கில், அந்த வங்கியின் தலைமை மேலாளர் உள்பட 13 பேர் மீது சென்னை சி.பி.ஐ. ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவு போலீசார் வழக்கு பதிந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த மதுரை சி.பி.ஐ. நீதிமன்றம் கடந்த 2019-ம் ஆண்டு வங்கி தலைமை மேலாளர் பாலசுப்பிரமணியன், சண்முகவேல், ராமலட்சுமி, செண்பகமூர்த்தி, அம்மா முத்து உள்ளிட்ட 8 பேருக்கு தண்டனை விதித்து உத்தரவிட்டது. இந்த வழக்கில் 5 பேர் விடுவிக்கப்பட்டனர்.

இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட 8 பேர் மதுரை ஐகோர்ட்டில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ராமகிருஷ்ணன் பிறப்பித்த உத்தரவில் தனது உத்தரவில் கூறியிருப்பதாவது:-

சி.பி.ஐ. மீது பொதுமக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். சில வழக்குகளில் போலீஸ் விசாரணை வேண்டாம் என, சி.பி.ஐ. விசாரணை கோரி பாதிக்கப்பட்டோர் மனுதாக்கல் செய்கின்றனர். ஏனென்றால் சி.பி.ஐ. எந்த ஒரு நிர்பந்தத்திற்கும் ஆளாகாமல் விசாரணை மேற்கொள்ளும் என பொது மக்கள் நம்புகின்றனர்.

ஆனால் சி.பி.ஐ. விசாரணையில் தவறு இருப்பது தெரிகிறது. சில வழக்குகளில் முக்கிய குற்றவாளிகளை விடுவித்துவிட்டு, சில நபர்கள் மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்வதாக பாதிக்கப்பட்ட தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவிக்கின்றனர்.

நிதி, பண மோசடி வழக்குகளில் சம்பந்தப்பட்டோர் அந்தத் தொகையை திருப்பி செலுத்தினாலும் அவர்களை சாட்சிகளாக சி.பி.ஐ. சேர்த்து விடுகின்றனர். சி.பி.ஐ. மீது ஊழல் குற்றச்சாட்டு புகார்கள் அதிகரித்து வருகின்றன. இதன் காரணமாக சி.பி.ஐ. மீது பொதுமக்கள் நம்பிக்கை இழந்து வருகின்றனர்.

சி.பி.ஐ. விசாரணை அமைப்பானது யாரும் கேள்வி கேட்க முடியாது என நினைக்கின்றனரா?. எனவே சி.பி.ஐ. மீது பொது மக்கள் நம்பிக்கை பெறுவதற்கு இந்த நீதிமன்றம் சில பரிந்துரைகளை செய்ய விரும்புகிறது.

சி.பி.ஐ. வழக்குகளில் குற்றவாளிகள் பெயர் சேர்ப்பது அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்வது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்வது என அனைத்தையும் சி.பி.ஐ. இயக்குநர் கண்காணிக்க வேண்டும். மேலும் அந்த வழக்குகள் தொடர்பான விசாரணை அதிகாரியையும் கண்காணிக்க வேண்டும்.

அதேபோல் சி.பி.ஐ. விசாரணை அதிகாரிகள் தேவையான அனைத்து அறிவியல் பூர்வமான தொழில்நுட்பங்களை அறிந்திருக்க வேண்டும். இந்த வழக்கில் சி.பி.ஐ. முறையாக விசாரிக்கவில்லை என்பது தெரிகிறது. எனவே 8 பேருக்கு விசாரணை நீதிமன்றம் விதித்த தண்டனை ரத்து செய்யப்படுகிறது.

இவ்வாறு அந்த உத்தரவில் நீதிபதி தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com