தனி மெஜாரிட்டியை பெற அ.தி.மு.க. அதிரடி வியூகம்: 160 தொகுதிகளில் போட்டியிட எடப்பாடி பழனிசாமி திட்டம்

160 தொகுதிகள் போக மீத முள்ள 74 தொகுதிகளை பா.ஜ.க. உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கவும் எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திலும் எடப்பாடி பழனிசாமி முக்கிய ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.
தனி மெஜாரிட்டியை பெற அ.தி.மு.க. அதிரடி வியூகம்: 160 தொகுதிகளில் போட்டியிட எடப்பாடி பழனிசாமி திட்டம்
Published on

சென்னை:

தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை சந்திப்பதற்கு அனைத்து கட்சிகளும் ஆயத்தமாகி வருகின்றன.

அந்த வகையில் தி.மு.க.வை வீழ்த்தி ஆட்சியில் அமர வேண்டும் என்கிற எண்ணத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமி காய் நகர்த்தி வருகிறார். இதற்காக பா.ஜ.க.வுடன் மீண்டும் கூட்டணி அமைத்துள்ள அவர் அ.தி.மு.க. கூட்டணியில் மேலும் பல கட்சிகளை சேர்ப்பதற்கான நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளார்.

இதன் மூலம் அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணியில் பா.ம.க, தே.மு.தி.க. உள்ளிட்ட கட்சிகளும் சேர்வதற்கு வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழகத்தில் அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி உறுதியானதையடுத்து மத்திய மந்திரி அமித்ஷா அளித்த பேட்டியில் அ.தி.மு.க. தலைமையில் கூட்டணி ஆட்சி அமைப்போம் என்று கூறியதாக செய்திகள் வெளியானது. இதுபற்றிய கேள்விக்கு பதில் அளித்த எடப்பாடி பழனிசாமி கூட்டணி ஆட்சி என்று அமித்ஷா சொல்லவில்லை என்று மறுத்தார்.

இதையடுத்து அ.தி.மு.க.வை தனி மெஜாரிட்டியுடன் ஆட்சியில் அமர வைத்திட வேண்டும் என்பதில் எடப்பாடி பழனிசாமி மிகவும் தீவிரமாக உள்ளார். இதற்கு வசதியாக கூடுதல் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர்களை களம் இறக்க அவர் முடிவு செய்துள்ளார். கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாரதிய ஜனதா கட்சி மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் 150 தொகுதிகளை நீங்கள் எடுத்துக் கொண்டு மீதமுள்ள 84 தொகுதிகளையும் எங்களிடம் கொடுத்துவிடுங்கள். நாங்கள் தேவையான தொகுதிகளை எடுத்துக் கொண்டு கூட்டணி கட்சிகளுக்கும் பிரித்து கொடுத்து விடுகிறோம் என்று கூறி உள்ளது.

ஆனால் எடப்பாடி பழனிசாமியோ 160 தொகுதிகளில் அ.தி.மு.க.வை போட்டியிட வைப்பதற்கு விரும்புகிறார். அப்போதுதான் ஆட்சி அமைப்பதற்கு தேவையான 117 இடங்களில் வெற்றி பெற்று தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க முடியும் என்பதே எடப்பாடி பழனிசாமியின் கணக்காக உள்ளது. 160 தொகுதிகள் போக மீத முள்ள 74 தொகுதிகளை பா.ஜ.க. உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கவும் எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த சட்டமன்ற தேர்தலில் 49 தொகுதியில் மிகவும் குறைவான வாக்கு வித்தியாசத்திலேயே அ.தி.மு.க. தோல்வியை தழுவி இருந்தது. 34 சட்டமன்ற தொகுதிகளில் 2 சதவீதத்துக்கும் குறைவான வாக்குகள் வித்தியாசத்திலும், 15 தொகுதிகளில் 4 சதவீத வாக்குகள் வித்தியாசத்திலுமே அ.தி.மு.க. தோல்வி அடைந்திருந்தது.

இந்த தொகுதிகள் எவை? எவை? என்பதை பட்டியல் போட்டு வைத்துள்ள எடப்பாடி பழனிசாமி அதனை அ.தி.மு.க. நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்களிடம் கொடுத்து குறிப்பிட்ட 49 தொகுதிகளிலும் கூடுதல் கவனம் செலுத்தி பணியாற்ற அறிவுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக நேற்று மாலையில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திலும் எடப்பாடி பழனிசாமி முக்கிய ஆலோசனைகளை வழங்கியுள்ளார். சட்டமன்ற தேர்தல் பணிகளில் ஒற்றுமையோடு செயல்பட வேண்டும் என்றும், தி.மு.க. அரசின் குறைகளை மக்கள் மத்தியில் எடுத்துச் சென்று தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு அ.தி.மு.க.வுக்கு வெற்றியை தேடித் தர வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி கட்சியினருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com