அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை

மேல் சபை எம்.பி. தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு 2 இடங்கள் இருக்கின்றன. அ.தி.மு.க. மேல் சபை வேட்பாளர் பட்டியல் அரசியல் வட்டாரத்திலும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை
Published on

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்களுடன் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்துகிறார். இந்த கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் இன்று மாலை 3.30 மணியளவில் நடைபெறுகிறது.

இந்த கூட்டத்தில் சட்டமன்ற தேர்தல் பணிகள் தொடர்பாக மாவட்ட செயலாளர்களுக்கு எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தல்கள், ஆலோசனைகளை வழங்க உள்ளார். இந்த கூட்டத்தில் மேல் சபை எம்.பி. வேட்பாளர் தேர்வு குறித்து விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.

மேல் சபை எம்.பி. தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு 2 இடங்கள் இருக்கின்றன. இதில் ஒரு இடம் பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாசுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மீதம் இருக்கும் ஒரு இடத்தில் தம்பிதுரைக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படுமா? அல்லது புதுமுக வேட்பாளர் அறிவிக்கப்படுவாரா? என்ற எதிர்பார்ப்பு அ.தி.மு.க.வினர் மத்தியில் இருந்து வரும் நிலையில் அ.தி.மு.க. வசம் உள்ள இந்த மேல் சபை பதவி இடத்தை தமிழக பா.ஜ.க. முன்னாள் தலைவர் அண்ணாமலைக்கு ஒதுக்கி தர வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமியிடம் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கேட்டுக்கொண்டதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

ஒரு வேளை அண்ணாமலைக்கு மேல் சபை பதவி இடத்தை அ.தி.மு.க. அளிக்க முன் வந்தால், அவர் மத்திய மந்திரியாவதற்கு வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது.

எனவே அ.தி.மு.க. மேல் சபை வேட்பாளர் பட்டியல் அரசியல் வட்டாரத்திலும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இது ஒருபுறம் இருக்க, அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க.வுக்கு குறைந்தபட்சம் 38 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று ஏற்கனவே கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதில், நீங்கள் வெற்றி வாய்ப்பு உள்ள தொகுதிகளை கேளுங்கள். அதிக இடங்களை வாங்கி வீணடித்துவிட வேண்டாம் என்று எடப்பாடி பழனிசாமி கேட்டுகொண்டதாக கூறப்படுகிறது.

நாங்கள் தொகுதிகளை குறைத்து கொண்டால், எங்களுடைய வேட்பாளர்கள் வெற்றிக்கு நீங்கள் பாடுபட வேண்டும் என்று பா.ஜ.க. தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com