முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு தமிழக மக்களிடம் எடுபடாது- எடப்பாடி பழனிசாமி

எங்களது சாதனைகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.‘பொய்யாலும், விளம்பரத்தாலும் உயர்ந்தவன் வாழ்க்கை நிலைக்காது’ என்பதை ஸ்டாலின் உணரும் காலம் விரைவில் வர உள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு தமிழக மக்களிடம் எடுபடாது- எடப்பாடி பழனிசாமி
Published on

சென்னை:

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் நெருங்க நெருங்க, பயத்தில் பிதற்றிக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். இன்று, சென்னை நுங்கம்பாக்கத்தில் நடைபெற்ற ஒரு விழாவில், 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டை தி.மு.க. அழுத்தத்தால் கொண்டு வந்தது போன்ற ஒரு மிகப்பெரிய பொய்யை கட்டமைத்துள்ளார்.

அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழை, எளிய, நடுத்தர மாணவர்களின் மருத்துவக் கனவை நிறைவேற்றுவதற்காக, மாணவர்களோ, பெற்றோர்களோ, எதிர்க்கட்சியினரோ கோராதபோது, எனது மனதில் உதித்த இந்தத் திட்டத்தை நிறைவேற்ற, கவர்னரின் ஒப்புதலுக்கு காலதாமதமானதால், அந்த நடப்பு கல்வி ஆண்டிலேயே நிறைவேற்ற வேண்டும் என்று, அரசியலமைப்புச் சட்ட ஷரத்தில் உள்ள உரிமையை பயன்படுத்தி, இந்தியாவிலேயே முதல் மாநிலமாக 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டை நிறைவேற்றி அரசாணை வெளியிட்டேன்.

'சத்துணவு திட்டம் என்றால் புரட்சித் தலைவர்' 'தொட்டில் குழந்தை திட்டம் என்றால் புரட்சித் தலைவி அம்மா' '7.5 சதவீத உள் இடஒதுக்கீடு என்றால் எனது தலைமையிலான அரசு' என்று எங்களது சாதனைகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.

ஏற்கனவே நான் முதலமைச்சராக இருந்தபோது, சென்னை மாநகராட்சி பள்ளிகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை தனியார் பங்களிப்புடன் அமல்படுத்தினோம். இந்தத் திட்டத்தையே உல்டாவாக்கி முதலமைச்சர், தான் புதிதாகக் கொண்டு வந்ததுபோல் தம்பட்டம் அடித்து வருகிறார்.

வாயைத் திறந்தால் பொய் சொல்வதையே வாடிக்கையாகக்கொண்டு செயல்படும் ஸ்டாலினின் பேச்சு இனி தமிழக மக்களிடம் எடுபடாது.

'பொய்யாலும், விளம்பரத்தாலும் உயர்ந்தவன் வாழ்க்கை நிலைக்காது' என்பதை ஸ்டாலின் உணரும் காலம் விரைவில் வர உள்ளது. இனியாவது இதுபோன்ற பொய்யை கட்டமைப்பதை உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com