அ.தி.மு.க. ஆட்சி அமைந்த பிறகு வணிகர்கள் பிரச்சனை தீர்க்கப்படும்- எடப்பாடி பழனிசாமி உறுதி

விழுப்புரத்தில் பேன்சி கடையில் போதை ஆசாமிகள் கடையில் புகுந்து வியாபாரியை தாக்கினார்கள். வணிகர்கள் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு தர வேண்டும்.
அ.தி.மு.க. ஆட்சி அமைந்த பிறகு வணிகர்கள் பிரச்சனை தீர்க்கப்படும்- எடப்பாடி பழனிசாமி உறுதி
Published on

மறைமலைநகர்:

தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநாடு செங்கல்பட்டு மறைமலைநகரில் இன்று நடந்தது. இதில் கலந்து கொண்டு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசினார். அவர் பேசியதாவது:-

சிறு-குறு வணிகர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் அந்நிய முதலீடு மசோதாவுக்கு தி.மு.க. ஆதரவு அளித்தது. சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டை எதிர்க்கவில்லை என்றால் சிறு வணிகமே இல்லாமல் போகும்.

எனது தலைமையிலான ஆட்சியில் 24 மணி நேரமும் கடைகளை நடத்த அனுமதி வழங்கப்பட்டது. அ.தி.மு.க. ஆட்சி மலர்ந்த பிறகு வணிகர்களின் பிரச்சனைகள் தீர்க்கப்படும்.

காரணம் இன்றி உள்நோக்கத்துடன் அரசு அலுவலர்கள் வணிக நேரத்தில் தொடர்ந்து ஆய்வு என்ற பெயரில் வியாபாரிகளை துன்புறுத்தி வருகிறார்கள். இதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.

விழுப்புரத்தில் பேன்சி கடையில் போதை ஆசாமிகள் கடையில் புகுந்து வியாபாரியை தாக்கினார்கள். காஞ்சிபுரம் போன்ற நகரங்களில் வணிகர்கள் சமூக விரோதிகளால் தாக்கப்படுகிறார்கள். வணிகர்கள் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு தர வேண்டும்.

நாட்டின் பொருளாதாரத்துக்கான முதுகெலும்பு வணிகர்கள். உற்பத்தியாளர்களுக்கும், வாங்குபவர்களுக்கும் இடையே அச்சாணியாக திகழ்வது நமது வணிகர்களே. அவர்கள் நலனை பாதுகாப்பதில் அ.தி.மு.க. எப்போதும் உறுதுணையாக இருக்கும்.

சிறிய தேனீர் விடுதி, அடகு கடைகள், சிற்றுண்டி சாலைகள், பழ வியாபாரிகள் தொழில் செய்வதற்கு முழு அளவில் போலீஸ் பாதுகாப்பு வழங்கிட வேண்டும் என்று வியாபாரிகள் என்னிடம் தெரிவித்தனர். எங்கள் ஆட்சியில் அவர்களுக்கு முழு பாதுகாப்பு கொடுக்கப்பட்டது. மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமைந்த பிறகு இந்த கோரிக்கைக்கு அ.தி.மு.க. செவி சாய்க்கும். நீங்கள் வைத்த கோரிக்கை நிறைவேற்றப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com