காமராஜர் குறித்த சர்ச்சை பேச்சு - திருச்சி சிவா வீட்டை முற்றுகையிட முயன்ற காங்கிரஸ் கட்சியினர் கைது

கோஷங்கள் எழுப்பியபடி ராஜா காலனியில் உள்ள திருச்சி சிவா வீட்டை நோக்கி ஊர்வலமாக புறப்பட்டனர்.காமராஜர் ஆட்சி போன்று தமிழக மக்கள் ஒரு ஆட்சியை கண்டதில்லை.
போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரசார்
போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரசார்
Published on

திருச்சி:

பெருந்தலைவர் காமரஜர் குறித்த திருச்சி சிவா எம்.பி. பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். திருச்சி சிவா எம்.பி. பேச்சை காங்கிரஸ் கட்சியும் கண்டித்து உள்ளது.

அவர் மன்னிப்பு கேட்காவிட்டால் அவரது வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என்று காங்கிரஸ் கட்சி மாநில பொதுச் செயலாளர் வக்கீல் சரவணன் அறிவித்தார்.

இதை தொடர்ந்து வக்கீல் சரவணன் தலைமையில், சிவாஜி பேரவை தலைவர் சிவாஜி சண்முகம், தமிழ்நாடு பாண்டிச்சேரி பார் கவுன்சில் உறுப்பினர் ராஜேந்திர குமார் உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் திருச்சி ஒருங்கிணைந்த நீதிமன்றம் அருகாமையில் உள்ள வ.உ.சி. சிலை முன்பு திரண்டனர்.

பின்னர் அங்கிருந்து கோஷங்கள் எழுப்பியபடி ராஜா காலனியில் உள்ள திருச்சி சிவா வீட்டை நோக்கி ஊர்வலமாக புறப்பட்டனர்.

அப்போது அங்கு பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டிருந்த போலீசார் நீதிமன்ற நுழைவு வாயில் முன்பு சரவணன் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோரை கைது செய்து வேனில் அழைத்து சென்றனர்.

பின்னர் அவர்களை வெஸ்ட்ரி பள்ளி மைதானத்தில் உள்ள ஒரு அரங்கில் அடைத்து வைத்தனர். இந்தப் போராட்டம் காரணமாக திருச்சியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

முன்னதாக வக்கீல் சரவணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

பெருந்தலைவர் காமராஜர் மனித கடவுள். அவரைப் பற்றி அவதூறான கருத்தை பரப்பிய திருச்சி சிவா எம்.பி. நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். காமராஜர் ஆட்சி போன்று தமிழக மக்கள் ஒரு ஆட்சியை கண்டதில்லை.

மக்களுக்கு வழங்கிய ரேஷன் அரிசியை தானும் சாப்பிட்டு வந்த மகான் காமராஜர். தமிழ்நாடு அரசின் விடுதியில் காமராஜருக்காக ஏ.சி. பொருத்தப்பட்டதாக உண்மைக்கு புறம்பான செய்தியை தெரிவித்துள்ளார்.

திருச்சி சிவாவின் விளக்கம் ஏற்கும்படியாக இல்லை. அவர் காங்கிரஸ் தொண்டர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com