விழுப்புரம் மாவட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாட்கள் கள ஆய்வு- கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி விழுப்புரம் மாவட்டம் விழாக்கோலம் பூண்டுள்ளது. சுமார் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாட்கள் கள ஆய்வு- கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை
Published on

விழுப்புரம்:

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்டந்தோறும் சுற்றுப்பயணம் செய்து கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இந்த ஆய்வு பயணத்தின் போது முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைத்தும், புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

அதன்படி விழுப்புரம் மாவட்டத்திற்கு 2 நாள் பயணமாக இன்று மாலை வருகிறார். இன்று மாலை சென்னையில் இருந்து காரில் புறப்பட்டு வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மாவட்ட எல்லையான ஓங்கூர் சுங்கச்சாவடி அருகில் வரவேற்பு அளிக்கப்படுகிறது.

வனத்துறை அமைச்சர் பொன்முடி தலைமையில் வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் பொன். கவுதமசிகாமணி, டாக்டர் சேகர் ஆகியோர் முன்னிலையில் தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர்.

அதனை தொடர்ந்து அங்கிருந்து புறப்பட்டு திண்டிவனம் நகரில் சென்னை சாலையில் மேம்பாலம் வழியாக ஜே.வி.எஸ். திருமண மண்டபம் வரை வந்து (ரோடு ஷோ) பொதுமக்களை சந்தித்து மனுக்களை பெறுகிறார்.

அதன் பின்னர் அந்த திருமண மண்டபத்தில் நடைபெறும் விழுப்புரம் வடக்கு, தெற்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் கட்சி நிர்வாகிகளுடன் கலந்துரையாடி சிறப்புரையாற்றுகிறார்.

பின்னர் திண்டிவனத்தில் இருந்து காரில் புறப்பட்டு விழுப்புரம் வருகிறார். அங்கு கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள சுற்றுலா மாளிகையில் தங்குகிறார். நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணியளவில் விழுப்புரம் ஜானகிபுரம் புறவழிச்சாலை அருகே ரூ.4 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் மறைந்த ஏ.கோவிந்தசாமியின் நினைவு அரங்கம் மற்றும் இட ஒதுக்கீடு போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் உயிர் நீத்த 21 சமூக போராளிகளின் தியாகத்தை போற்றும் வகையில் ரூ. 5.70 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள மணி மண்டபம் ஆகியவற்றை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்து பார்வையிடுகிறார்.

அதனை தொடர்ந்து அங்கு அமைக்கப்பட்டிருக்கும் விழா பந்தல் மேடைக்கு செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றுகிறார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி விழுப்புரம் மாவட்டம் விழாக்கோலம் பூண்டுள்ளது. திண்டிவனம், விழுப்புரம் உள்ளிட்ட இடங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வரவேற்று தி.மு.க. கொடி தோரணங்கள் கட்டப்பட்டுள்ளது. பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. சுமார் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com