மாணவியை வகுப்பறைக்கு வெளியே அமர வைத்து தேர்வு எழுத வைத்த விவகாரம்: 3 பேர் மீது வழக்கு

மாணவி படிக்கட்டில் அமர்ந்து தேர்வு எழுதும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.பள்ளியின் முதல்வர் ஆனந்தியை பணியிடை நீக்கம் செய்து பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது.
மாணவியை வகுப்பறைக்கு வெளியே அமர வைத்து தேர்வு எழுத வைத்த விவகாரம்: 3 பேர் மீது வழக்கு
Published on

கோவை:

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தாலுகா செங்குட்டுப்பாளையத்தில் தனியார் மெட்ரிக் பள்ளி செயல்பட்டு வருகிறது.

இந்த பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவர் கடந்த 5-ந் தேதி பூப்பெய்தி உள்ளார்.

தற்போது பள்ளியில் முழு ஆண்டு தேர்வு நடைபெற்று வருவதால் மாணவியை வகுப்பறையில் தனியாக அமர செய்து தேர்வு எழுத அனுமதிக்குமாறு மாணவியின் பெற்றோர் கேட்டதாக தெரிகிறது.

இதையடுத்து கடந்த 7-ந் தேதி தேர்வு எழுத பள்ளிக்கு சென்ற மாணவியை வகுப்பறைக்கு வெளியே உள்ள படிக்கட்டில் அமர செய்து தேர்வு எழுத வைத்துள்ளனர். இதனால் மாணவி மன உளைச்சலுக்கு ஆளானார். தனது தாயாரிடமும் இது குறித்து தெரிவித்தார்.

கடந்த 9-ந் தேதியும் இதேபோன்று மாணவியை வகுப்பறைக்குள் அனுமதிக்காமல் படியில் அமர வைத்து தேர்வு எழுத வைத்துள்ளனர்.

இதுபற்றி அறிந்த மாணவியின் தாய் பள்ளிக்கு சென்று, பள்ளி முதல்வரிடம் இதுபற்றி கேட்டுள்ளார். அதற்கு பள்ளி முதல்வர் சரியாக பதில் அளிக்காமல் மிரட்டல் தொனியில் பேசியதாக தெரிகிறது.

இந்த நிலையில் மாணவி படிக்கட்டில் அமர்ந்து தேர்வு எழுதும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.

இதனை தொடர்ந்து, பொள்ளாச்சி உதவி போலீஸ் சூப்பிரண்டு சிருஷ்டி சிங், நெகமம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பானுமதி தலைமையிலான போலீசார் பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினர்.

மாவட்ட பள்ளிக்கல்வித்துறை உதவி இயக்குனர் வடிவேலும் பள்ளிக்கு சென்று விசாரணை மேற்கொண்டார்.

அப்போது மாணவியின் பெற்றோரிடம் பேசிய அதிகாரிகள் தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர்.

மேலும் இதுபோன்ற செயல்கள் பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் உள்ள பிற பள்ளிகளில் உள்ளதா? என்பது குறித்தும் ஆய்வு செய்யப்படும் என தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே இந்த விவகாரத்தில் பள்ளியின் முதல்வர் ஆனந்தியை பணியிடை நீக்கம் செய்து பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது.

இந்த நிலையில் பள்ளி மாணவியை வகுப்பறைக்குள் அனுமதிக்காமல் படியில் அமர வைத்து தேர்வு எழுத வைத்த சம்பவம் குறித்து மாணவியின் தந்தை நெகமம் போலீசில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி, பள்ளியின் தாளாளர் தங்கவேல் பாண்டியன், முதல்வர் ஆனந்தி, அலுவலக உதவியாளர் சாந்தி ஆகியோர் மீது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். இதுதொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com