சென்னை அரசு மருத்துவமனையில் லஞ்சம்.. மருத்துவர்களுக்கு தெரிந்தே பணம் பறிக்கிறார்களா ஊழியர்கள்?

வாட்ச்மேனில் இருந்து வார்டு பாய்கள், துப்புரவுப் பணியாளர்கள் முதல் துணை மருத்துவ ஊழியர்கள் வரை அனைவரும் பணம் கேட்கிறார்கள்.மருத்துவர்கள் நேரடியாகக் கேட்பதில்லை, ஆனால் இது ஒரு நடைமுறை என்று அவர்களுக்குத் தெரியும்.
சென்னை அரசு மருத்துவமனையில் லஞ்சம்.. மருத்துவர்களுக்கு தெரிந்தே பணம் பறிக்கிறார்களா ஊழியர்கள்?
Published on

சென்னை அரசு பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் பிரசவத்திற்குப் பிறகு, ஊழியர்கள் கட்டாயப்படுத்தி பணம் வசூலிப்பதாக நோயாளிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

டைம்ஸ் ஆப் இந்தியா வெளியிட்டுள்ள செய்தியின்படி, சமீபத்தில் ஆண் குழந்தையை பெற்றெடுத்த கார்த்திகா என்ற பெண்ணின் குடும்பத்திடம், அவரைப் பிரசவ வார்டுக்கு மாற்றவும், குழந்தையை சுத்தம் செய்யவும் வார்டு பாய்கள் தலா ரூ.3,000 லஞ்சம் கேட்டுள்ளனர்.

பயந்த கார்த்திகாவின் குடும்பத்தினர், வேறு வழியின்றி பணம் செலுத்தியுள்ளனர். அவர் மருத்துவமனையில் இருந்து வெளியேறும் வரை, மொத்தம் ரூ.10,000 வரை செலவழித்ததாகத் தெரிகிறது.

இதுகுறித்து பேசிய கார்த்திகா, "வாட்ச்மேனில் இருந்து வார்டு பாய்கள், துப்புரவுப் பணியாளர்கள் முதல் துணை மருத்துவ ஊழியர்கள் வரை அனைவரும் பணம் கேட்கிறார்கள்" என்று வருத்தத்துடன் தெரிவித்தார்.

இவை அனைத்தும் இலவசமாக வழங்கப்பட வேண்டிய சேவைகள் என்று குறிப்பிட்ட கார்த்திகா,மருத்துவர்கள் நேரடியாகக் கேட்பதில்லை, ஆனால் இது ஒரு நடைமுறை என்று அவர்களுக்குத் தெரியும் என்று கூறினார்.

மருத்துவமனை ஊழியர்களின் லஞ்சப் பட்டியல் :

வார்டு பாய்கள் - அறுவை சிகிச்சை அறையில் இருந்து குழந்தையை சாதாரண வார்டுக்கு மாற்றுதல், குழந்தையை சுத்தம் செய்தல் மற்றும் நோயாளிக்கு பிற வகையான உதவி ஆகியவற்றுக்கு சராசரியாக ரூ.500 முதல் ரூ.3000 வரை லஞ்சம் கேட்கின்றனர்.  

பெண் மருத்துவ உதவியாளர்கள் - பிரசவ உதவி, குழந்தைக்கு குளிப்பாட்டுதல், துணிகள் கொண்டு வருதல் மற்றும் பிற சேவைகளுக்கு ரூ.500 முதல் ரூ.1000 லஞ்சம் கேட்கின்றனர்.

துப்புரவு பணியாளர்கள் - துப்புரவு சேவை மற்றும் நோயாளிகளின் வார்டுக்கு வழிகாட்டுதலுக்கு குறைந்தது ரூ.20 முதல் ரூ.50 லஞ்சம் கேட்கின்றனர்.

இதுதவிர வாட்ச்மேன்கள் ரூ.100 லஞ்சமாக பெறுகின்றனர்.

சம்பந்தப்பட்ட மருத்துவமனையின் குடியிருப்பு மருத்துவ அதிகாரி டாக்டர் சங்கீதா, இந்த பிரச்சினை குறித்து தாங்கள் அறிந்திருப்பதாகவும், ஆனால் அதனைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்றும் கூறுகிறார்.

"பணம் கேட்க வேண்டாம் என்று ஊழியர்களிடம் கூறுகிறோம், இருப்பினும் இத்தகைய புகார்கள் வந்துகொண்டே இருக்கின்றன. ஊழியர்களைக் கண்காணிக்க சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஆனால் இதுவரை அவர்களை அடையாளம் காண முடியவில்லை" என்றும் அவர் டாக்டர் சங்கீதா வருத்தத்துடன் தெரிவித்தார்.

சிறுசிறு வேலைகள் முதல் நோயாளிகளை வேறு அறைக்கு மாற்றுவது அல்லது ஸ்கேன் எடுப்பது போன்ற பெரிய வேலைகளுக்கும் ரூ.50 முதல் ரூ.500 அல்லது அதற்கு மேல் பணம் கோரப்படுவதாக நோயாளிகளின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

பணம் கொடுக்க மறுப்பவர்கள் வாய்மொழித் துஷ்பிரயோகத்திற்கு ஆளாவதாகவும், பார்வையாளர்கள் நேரத்திலும் நோயாளிகளைப் பார்க்க அனுமதிக்கப்படுவதில்லை என்றும் அவர்கள் கூறுகின்றனர். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com