குழந்தைகள் காப்பகத்தில் சிறுவனை பெல்ட்டால் கொடூரமாக தாக்கும் நபர்- விசாரணை தீவிரம்

வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.விசாரணை முடிந்ததும் சட்டரீதியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் தெரிவித்தார்.
குழந்தைகள் காப்பகத்தில் சிறுவனை பெல்ட்டால் கொடூரமாக தாக்கும் நபர்-  விசாரணை தீவிரம்
Published on

கோவை:

கோவை மாவட்டம் சர்க்கார் சாமக்குளம் அடுத்த கோட்டைபாளையத்தில், தனியார் குழந்தைகள் காப்பகம் ஒன்று செயல்பட்டு வருகிறது.

இந்த காப்பகத்தில் தாய், தந்தை இல்லாத ஆதரவற்ற 26 குழந்தைகள் வைத்து பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் சம்பவத்தன்று இந்த காப்பகத்தில் சிறுவர்கள் அனைவரும் அமர்ந்து படித்து கொண்டிருக்கிறார்கள். அப்போது அங்கு வரும் காப்பகத்தில் உள்ளவர், அங்கு படித்து கொண்டிருக்கும் சிறுவர்களில் ஒரு சிறுவனை எழுப்பி விசாரிக்கிறார். பின்னர் அந்த சிறுவனை தனது பெல்ட்டை எடுத்து தாக்குகிறார்.

வலி தாங்க முடியாத அந்த சிறுவனோ நான் எதுவும் செய்யவில்லை என கூறியபடியே ஐயோ.. ஐயோ என கத்துகிறார். ஆனாலும் கொடூர நெஞ்சம் கொண்ட அந்த நபர், சிறுவனின் அலறல் சத்தத்தை பொருட்படுத்தாமல் தொடர்ந்து சிறுவனை தாக்கி கொண்டே இருக்கிறார்.

வலியால் துடித்த சிறுவன் அவரிடம் இருந்து தப்பி கீழே சென்று அமர்ந்துள்ளார். அப்போதும் அந்த நபர், சிறுவனை பெல்ட்டால் சரமாரியாக தாக்குகிறார். இதனை அங்கு இருந்த மற்ற சிறுவர்கள் பார்த்து அச்சத்தில் உறைந்து போய் உள்ளனர்.

இப்படி சிறுவனை அந்த நபர் கொடூரமாக தாக்குவதும், சிறுவன் வலி தாங்க முடியால் அலறி கொண்டும் இருப்பதை அங்கு பணியில் இருந்த மற்றவர்கள் பார்த்து அதனை தடுக்காமல், ஓரமாக நின்று வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறார்கள்.

இந்த நிலையில் காப்பகத்தில் சிறுவனை நபர் ஒருவர் பெல்ட்டால் கொடூரமாக தாக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இது பொதுமக்களிடையே மிகுந்த அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறையினர் உரிய விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இதற்கிடையே இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், விசாரணையின் முடிவில் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக கலெக்டர் பவன்குமார் கூறும்போது, சர்க்கார் சாமகுளம் பகுதியில் உள்ள தனியார் காப்பகத்தில் சிறுவன் பெல்டால் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக காவல்துறை மற்றும் கோவை மாவட்ட குழந்தைகள் நலத்துறை இணைந்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. விசாரணை முடிந்ததும் சட்டரீதியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com