அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஞானசேகரன் குற்றவாளி - அதிரடி தீர்ப்பு

பாதிக்கப்பட்ட மாணவி கொடுத்த புகாரின் அடிப்படையில், கோட்டூர்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்த ஞானசேகரனை கைது செய்தனர்.சென்னையில் உள்ள மகளிர் கோர்ட்டில் மார்ச் மாதம் முதல் விசாரணை தொடங்கியது.
அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஞானசேகரன் குற்றவாளி - அதிரடி தீர்ப்பு
Published on

சென்னை:

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவரை ஞானசேகரன் என்பவர் கடந்த ஆண்டு டிசம்பர் 23-ந்தேதி பாலியல் வன்கொடுமை செய்தார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவி கொடுத்த புகாரின் அடிப்படையில், கோட்டூர்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்த ஞானசேகரனை கைது செய்தனர்.

இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஞானசேகரன் ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர் என்பதால், சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றக்கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், வி.லட்சுமிநாராயணன் ஆகியோர், பாலியல் வன்கொடுமை வழக்கை விசாரிக்க ஐ.பி.எஸ். அதிகாரிகள் கொண்ட சிறப்பு புலனாய்வுக்குழுவை அமைத்தனர். அதன்படி, இந்த வழக்கை விசாரித்த சிறப்பு புலனாய்வுக்குழு அதிகாரிகள், குற்றப்பத்திரிகையை கோர்ட்டில் தாக்கல் செய்தனர்.

சென்னையில் உள்ள மகளிர் கோர்ட்டில் மார்ச் மாதம் முதல் விசாரணை தொடங்கியது. அப்போது, ஞானசேகரனுக்கு வக்கீல்கள் யாரும் ஆஜராகவில்லை. இதையடுத்து ஞானசேகரன் சார்பில் ஆஜராக வக்கீல்கள் கோதண்டராமன், ஜெயபிரகாஷ் ஆகியோரை சட்டப்பணி ஆணைக்குழு நியமித்தது.

கடந்த ஏப்ரல் 23-ந்தேதி சாட்சி விசாரணை தினந்தோறும் என்ற அடிப்படையில் நடந்தது. பாதிக்கப்பட்ட மாணவி உள்பட 29 பேர் சாட்சியம் அளித்தனர். 75 சான்று ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன.

போலீஸ் தரப்பில் வக்கீல் எம்.பி.மேரி ஜெயந்தி ஆஜராகி வாதிட்டார். அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பு மே.28-ந்தேதி வழங்கப்படும் என்று நீதிபதி ராஜலட்சுமி கடந்த வாரம் உத்தரவிட்டார்.

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் தீர்ப்பளிக்கப்பட உள்ள நிலையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஞானசேகரன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

சென்னை மகளிர் நீதிமன்ற நீதிபதி ராஜலட்சுமி, இருதரப்பு வழக்கறிஞர்களும் நீதிமன்றத்திற்கு வந்தனர்.

இந்த நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதி ராஜலட்சுமி பிறப்பித்தார். 

நீதிபதி தனது தீர்ப்பில் அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஞானசேரகன் குற்றவாளி என்று நிரூபணம் ஆகி உள்ளது. அவர் மீது பதிவு செய்யப்பட்டுள்ள 11 பிரிவுகளிலும் அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது. அவருக்கான தண்டனை விவரங்கள் ஜூன் 2-ந்தேதி அறிவிக்கப்படும் என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com