இங்கிருந்த பஸ் எங்கடா? இடம்பிடிக்க அமரவைக்கப்பட்ட 2½ வயது குழந்தையுடன் புறப்பட்டு சென்ற அரசு பஸ்

பஸ் சுமார் ½ மணி நேரம் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது. மயிலாடுதுறை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.
பஸ்சில் தனியாக அமர்ந்திருந்த குழந்தையிடம் சாக்லெட் கொடுத்து கொஞ்சி மகிழ்ந்த பயணிகள்.
பஸ்சில் தனியாக அமர்ந்திருந்த குழந்தையிடம் சாக்லெட் கொடுத்து கொஞ்சி மகிழ்ந்த பயணிகள்.
Published on

தரங்கம்பாடி:

மயிலாடுதுறை பழைய பஸ் நிலையத்தில் இருந்து நீடூர் வழியாக பந்தநல்லூர் செல்லும் அரசு பஸ் புறப்பட்டது. அந்த பஸ்சில் உள்ள ஒரு இருக்கையில் 2½ வயது பெண் குழந்தை மட்டும் தனியாக இருந்துள்ளது. அதை தவிர மற்ற இருக்கைகளில் பயணிகள் ஏறி இடம் பிடித்து அமர்ந்து கொண்டனர்.

அந்த பஸ்சிற்கு ஒதுக்கப்பட்ட நேரம் வந்ததும் நிலையத்தில் இருந்து பஸ் புறப்பட்டது. சிறிது தூரம் சென்றதும் குழந்தை தனியாக இருப்பதை கண்ட சக பயணிகள் குழந்தை யாருடையது? என தெரியாமல் குழம்பினர். பின்னர், உடனடியாக கண்டக்டர் மாதவனிடம் இதுகுறித்து தகவல் தெரிவித்தனர்.

இதனால் பதறிப்போன அவர் டிரைவரிடம் தெரிவித்து, பஸ்சை உடனடியாக பழைய பஸ் நிலையத்திற்கு திருப்பினர். அதனை தொடர்ந்து, பஸ் சுமார் ½ மணி நேரம் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது. பஸ்சில் இருந்த கல்லூரி மாணவிகள் மற்றும் பயணிகள் சிலர் குழந்தை அழாமல் இருப்பதற்காக சாக்லெட் கொடுத்து கொஞ்சி மகிழ்ந்தனர்.

இதுகுறித்து, பணிமனை அலுவலர்கள் கொடுத்த புகாரின் பேரில் மயிலாடுதுறை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

இது ஒருபுறம் இருக்க மற்றொருபுறம் குழந்தையை அமர வைத்திருந்த பஸ்சை காணவில்லை என பதறிப்போன பெற்றோர்கள் ஆட்டோவில் ஏறி பஸ் செல்லும் பாதையை நோக்கி சென்றுள்ளனர். ஒரு கட்டத்தில் அவர்கள் மறுபடியும் பஸ் நிலையத்தையே வந்தடைந்தனர்.

அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், பஸ்சில் இடம் பிடிப்பதற்காக குழந்தையுடன் ஏறிய தந்தை குழந்தையை அமர வைத்து விட்டு, தனது கர்ப்பிணி மனைவியை அழைத்து வருவதற்காக பஸ்சில் இருந்து இறங்கியதும், அதற்குள் பஸ் அங்கிருந்து புறப்பட்டு சென்றதும் தெரியவந்தது.

மேலும், பஸ்சின் பாதையை பின்தொடர்ந்து, சுமார் 5 கி.மீ. வரை சென்றுவிட்டு, மறுபடியும் பஸ் நிலையத்திற்கு வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, நன்கு விசாரித்த போலீசார் குழந்தையை அவர்களிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் மயிலாடுதுறை பஸ் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com