'அவதூறு பரப்பிய அண்ணாமலை மீது வழக்குப்பதிவு செய்யவேண்டும்' - செல்வப்பெருந்தகை

மாணவியின் மரணத்திற்கு மதமாற்றம் என்பது காரணம் கிடையாது என்று தெளிவாக கூறப்பட்டிருக்கிறது.தமிழ்நாட்டின் மதநல்லிணக்கத்திற்கும், அமைதிக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்துகின்ற வகையில் இச்சம்பவம் அரசியலாக்கப்பட்டது.
'அவதூறு பரப்பிய அண்ணாமலை மீது வழக்குப்பதிவு செய்யவேண்டும்' - செல்வப்பெருந்தகை
Published on

கடந்த 2022ஆம் ஆண்டு உயிரை மாய்த்துக் கொண்ட பள்ளி மாணவி லாவண்யா விவகாரத்தில் அண்ணாமலை மீது வழக்குப்பதிவு செய்யவேண்டும் என காங்கிரஸ் மாநிலத்தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், 

"தஞ்சாவூர் மாவட்டம், மைக்கேல்பட்டியில் பள்ளி மாணவி லாவண்யா கடந்த 2022 ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார். மதமாற்ற அழுத்தம் காரணமாகவே அந்த மாணவி தற்கொலை செய்து கொண்டதாக அப்போது பா.ஜ.க. மாநில தலைவராக இருந்த அண்ணாமலை ஆதாரமற்ற அவதூறு கருத்துக்களை கூறியது, தற்போது சி.பி.ஐ. விசாரணையின் மூலம் அம்பலமாகியுள்ளது.

தூய இருதய மேல்நிலை பள்ளியில் படித்து வந்த மாணவி லாவண்யா தற்கொலை செய்து கொண்டது மதமாற்ற அழுத்தத்தினால் இல்லை என்று சி.பி.ஐ. தனது அறிக்கையில் கூறியிருக்கிறது. ஆனால், பா.ஜ.க.வினர் மாணவி கட்டாய மதமாற்றம் காரணமாகவே தற்கொலை செய்து கொண்டார் என்று பகிரங்கமாக குற்றம்சாட்டி பதற்றமான சூழ்நிலையை ஏற்படுத்தினர்.

இந்த குற்றச்சாட்டுகளுக்கு எந்த ஆதாரமும் கிடையாது என்பதை சி.பி.ஐ. உறுதி செய்துள்ளது. இந்த வழக்கு தொடர்பாக சி.பி.ஐ. உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் மாணவியின் மரணத்திற்கு மதமாற்றம் என்பது காரணம் கிடையாது என்று தெளிவாக கூறப்பட்டிருக்கிறது.

இந்நிலையில், அண்ணாமலையின் இந்த ஆதாரமற்ற குற்றச்சாட்டு மூலமாக மதநல்லிணக்கத்தை சீர்குலைத்து, மத அமைதிக்கு கேடு விளைவித்து அதன்மூலம் அரசியல் ஆதாயம் தேடியது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதன்மூலம் பா.ஜ.க.வின் கீழ்த்தரமான மதவெறுப்பு அரசியல் வெளிப்பட்டிருக்கிறது.

பா.ஜ.க.வின் அப்போதைய மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் மாவட்ட பா.ஜ.க. தலைவர் உள்ளிட்டோர் எவ்வித அடிப்படை ஆதாரமும் இல்லாமல் இது மதமாற்ற தற்கொலை என்று முத்திரை குத்தி, தமிழ்நாட்டின் மதநல்லிணக்கத்திற்கும், அமைதிக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்துகின்ற வகையில் இச்சம்பவம் அரசியலாக்கப்பட்டது. மகளை இழந்து துயரத்தில் இருந்த பெற்றோரை ஆறுதல்படுத்தாமல் அவர்களை தவறாக வழிநடத்தி, மகளின் உடலைப் பெற விடாமல் தடுத்து போராட்டக் களத்திற்கு இழுத்து வந்த பா.ஜ.க. தலைவரின் செயல் மன்னிக்க முடியாத குற்றமாகும்.

தமிழ்நாட்டில் பல ஆண்டுகாலமாக கல்விச் சேவை மூலம், சிறுபான்மை கிறிஸ்துவ கல்வி நிறுவனங்கள் ஏழை,எளிய மக்களுக்கு ஆற்றி வருகிற தூய்மையான பணியை கொச்சைப்படுத்துகிற வகையில் மதமாற்றத்திற்கு துணை போகிறார்கள் என்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை கூறி மதநல்லிணக்கத்தை சீர்குலைத்த அண்ணாமலையின் செயல் சி.பி.ஐ. விசாரணையின் மூலமாக அம்பலத்திற்கு வந்துள்ளது.

இத்தகைய சட்டவிரோத செயல்களை செய்து மதநல்லிணக்கத்தை சீர்குலைக்க முயன்ற அன்றைய பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, மாவட்ட பா.ஜ.க. தலைவர் ஆகியோர் மீது தமிழ்நாடு காவல்துறை உடனடியாக வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்த வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். " எனக் குறிப்பிட்டுள்ளார். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com