கரூர் சாலை விபத்தில் 5 பேர் பலி- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவிப்பு

ஆம்னி பேருந்தில் பயணித்த சிறுவன், சிறுமி, ஓட்டுநர் உள்பட 5 பேர் உயிரிழந்தனர்.விபத்தில் காயமடைந்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 27 நபர்களுக்கு சிறப்பு சிகிச்சை.
கரூர் சாலை விபத்தில் 5 பேர் பலி- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவிப்பு
Published on

கரூர் செம்மடை நாவல் நகர் அருகே ஆம்னி பேருந்து, சாலையின் தடுப்பு சுவரை தாண்டி எதிர் திசையில் வந்த சுற்றுலா வேன் மீது மோதியதில் அதில் பயணித்த சிறுவன், சிறுமி, ஓட்டுநர் உள்பட 5 பேர் உயிரிழந்தனர். மேலும் 15 பேர் காயமடைந்தனர்.

இந்நிலையில், விபத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்ததுடன் நிதியுதவி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கரூர் மாவட்டம், மண்மங்கலம் வட்டம், ஆத்தூர் கிராமம் பரணி பார்க் பள்ளியின் கிழக்குப் பக்கம், நாமக்கல் கரூர் தேசிய நெடுஞ்சாலை, சின்ன வடுகப்பட்டி அருகில் இன்று (17.5.2025) காலை சுமார் 5.30 மணியளவில் பெங்களூருவிலிருந்து நாகர்கோவில் நோக்கிச் சென்ற தனியார் ஆம்னி பேருந்து ஒன்று முன்னாள் சென்ற டிராக்டர் ஒன்றின் மீது மோதி பின்னர் எதிர் சாலையில் கோவில்பட்டியிலிருந்து சேலம் நோக்கி வந்துகொண்டிருந்த மேக்ஸி கேப் வாகனம் ஒன்றின் மீது எதிர்பாராதவிதமாக மோதிய விபத்தில் மேக்ஸி கேப் வாகனத்தில் பயணம் செய்த தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியைச் சேர்ந்த சசிகுமார் (வயது 52) அருண் திருப்பதி (வயது 45) , செல்வன்.காமாட்சி அஸ்வின் (வயது 10), விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த செல்வி.எழில் தஷனா (வயது 12) ஆகிய நான்கு நபர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த செல்வி.ஹேமவர்ஷினி (வயது 20) சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிசிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

மேலும், இவ்விபத்தில் காயமடைந்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் 27 நபர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும். அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா மூன்று லட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும், இலேசான காயமடைந்தவர்களுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாயும் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com