கனமழைக்கு வாய்ப்புள்ள 3 மாவட்டங்கள்- வானிலை ஆய்வு மையம்

தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்றும் நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
கனமழைக்கு வாய்ப்புள்ள 3 மாவட்டங்கள்- வானிலை ஆய்வு மையம்
Published on

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தென்மேற்கு பருவமழை வட தமிழக கடலோர மாவட்டங்களில் தீவிரமாக இருந்தது.

வடதமிழக கடலோர மாவட்டங்களில் அநேக இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், தென்தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் மழை பெய்துள்ளது. காரைக்கால் பகுதிகளில் லேசான மழை பதிவாகியுள்ளது.

நேற்று தெற்கு ஒரிசா வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகளின் மேல் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, இன்று காலை வடக்கு ஆந்திர தெற்கு ஒரிசா கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, தெற்கு ஒரிசா மற்றும் அதனை ஒட்டிய வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகளில் அடுத்த இரு தினங்களில் கடந்து செல்லக்கூடும்.

தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை மற்றும் நாளை மறுநாள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

வரும் 15-ந்தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்றும் நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com