தேர்தல் நேரத்தில் தமிழக கட்சிகளுடன் கூட்டணி முடிவு- புதுச்சேரி முதலமைச்சர் அறிவிப்பு

என்.ஆர்.காங்கிரஸ் கட்சியை தொடங்கும்போதே தமிழகத்திலும் கட்சியை வளர்த்து பணியாற்ற வேண்டும் என்று எண்ணம் இருந்தது. தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் இருந்து கட்சியில் இணைவதற்காக கேட்டு வருகின்றனர்.
தேர்தல் நேரத்தில் தமிழக கட்சிகளுடன் கூட்டணி முடிவு- புதுச்சேரி முதலமைச்சர் அறிவிப்பு
Published on

புதுச்சேரி:

கடந்த 7-ந்தேதி நடந்த என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் 15-ம் ஆண்டு விழாவில் கட்சியின் நிறுவனரும், புதுச்சேரி முதலமைச்சருமான ரங்கசாமி பேசும்போது, கட்சியை தமிழக பகுதிக்கும் விரிவுபடுத்தி நிர்வாகிகளை நியமித்து வரும் சட்டசபை தேர்தலில் தமிழகத்தில் கூட்டணி கட்சியினருடன் போட்டியிட தயாராகி வருவதாக அறிவித்தார்.

அதனைத் தொடர்ந்து வேலூர் மாவட்டத்தை சேர்ந்த பரத்குமார் என்பவரின் தலைமையில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்டோர் புதுச்சேரி கோரி மேட்டில் உள்ள அப்பா பைத்திய சுவாமி கோவிலில் முதலமைச்சர் ரங்கசாமி முன்னிலையில் என்.ஆர். காங்கிரசில் இணைந்தனர்.

அகில இந்திய என்.ஆர்.காங்கிரஸ் கட்சியை தொடங்கும்போதே தமிழகத்திலும் கட்சியை வளர்த்து பணியாற்ற வேண்டும் என்று எண்ணம் இருந்தது. அந்த நேரத்தில் பல தலைவர்கள் என்னிடம் வந்தனர். நான் யாரிடமும் செல்லாமல், அ.தி.மு.க., கூட்டணியுடன் புதுச்சேரியில் ஆட்சி அமைத்தேன். தற்போது கூட்டணியுடன் ஆட்சி நடத்தி வருகிறேன்.

நான் தமிழகப் பகுதிகளுக்கு செல்லும்போது, அப்பகுதி மக்கள் மற்றும் எனது நண்பர்கள் தமிழகத்திலும் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி வரவேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

அவர்களுக்கு பணியாற்ற வாய்ப்பு அளிக்கும் விதத்தில் வருகிற 2026-ம் ஆண்டு தேர்தலில் தமிழ கத்தில் கூட்டணி கட்சிகளின் செயல்பாடுகளை பொறுத்து போட்டியிடலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதை தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் இருந்து கட்சியில் இணைவதற்காக கேட்டு வருகின்றனர். அதில் வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் முதலில் இணைந்துள்ளனர். புஸ்சி ஆனந்த் மற்றும் விஜய் எனது நண்பர்கள். அதனால் சந்திக்கின்றனர். தேர்தல் நேரத்தில் கூட்டணி கட்சிகள் பற்றி முடிவு எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

புதுச்சேரியில், என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தொடங்கிய 15 ஆண்டில் 2 முறை காங்கிரஸ்-தி.மு.க., கூட்டணியை எதிர்த்து வெற்றி பெற்று முதலமைச்சர் ரங்கசாமி, தற்போது, தமிழகத்திலும் கட்சியை விரிவுபடுத்த தீவிரம் காட்டி வருவது புதுச்சேரி மற்றும் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com