பாபர் மசூதியைப் போல அவுரங்கசீப் கல்லறையை வேரோடு பிடுங்கி எறிவோம் - இந்து அமைப்புகள் மிரட்டல்!

மகாராஷ்டிரத்தின் எதிரியின் மிச்சங்களை நாம் ஏன் வைத்திருக்க வேண்டும் என்று ஏக்நாத் ஷிண்டே தெரிவித்தார். மகாராஷ்டிர மக்களை நிம்மதியாக வாழவிடக்கூடாது என்பதற்காக இந்து அமைப்புகள் கலவரத்தை தூண்டுகின்றன.
பாபர் மசூதியைப் போல  அவுரங்கசீப் கல்லறையை வேரோடு பிடுங்கி எறிவோம் - இந்து அமைப்புகள் மிரட்டல்!
Published on

 மகாராஷ்டிரத்தின் ஔரங்கபாத் நகரில் ஔரங்கசீப் கல்லறை உள்ளது. அந்தக் கல்லறையை அகற்றாவிட்டால் மாநிலம் முழுவது இன்று போராட்டம் நடத்தவிருப்பதாக விஷ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங் தள் உள்ளிட்ட இந்து அமைப்புகள் மிரட்டல் விடுத்தனர்.

மேலும் ஔரங்கசீப்பின் கல்லறை அகற்றப்படாவிட்டால், பாபர் மசூதியைப் போல கரசேவை செய்து கல்லறையை வேரோடு பிடுங்கி எறிவோம் என்று பஜ்ரங் தளம் மகாராஷ்டிரா அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்க ஔரங்கசீப் கல்லறையைச் சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. காவல்துறையினர் அங்கு 24 மணி நேரமும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கிடையில், மகாராஷ்டிராவின் புனேவில், ஔரங்கசீப்பின் கல்லறையை அகற்றக் கோரி இந்து அமைப்புகள் போராட்டங்களை நடத்தின.

விஹெச்பி மாநிலத் தலைவர் கோவிந்த்ஜி ஷிண்டே பேசுகையில், "ஔரங்கசீப் கல்லறையை அகற்றுவதற்கான முடிவுவை முன்னெடுப்பகள் மூலம் நிறைவேற்ற உள்ளோம். மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துதல், மனு வழங்குதல், கோரிக்கைகள், உருவ பொம்மை எரிப்பு, பொதுக் கூட்டங்கள் மூலம் இதுபற்றி பிரசாரங்கள் மேற்கொள்ளப்படும். இறுதியாக சம்பாஜி நகர் நோக்கி ஊர்வலம் செல்வோம்" என்று தெரிவித்தார்.

மகாராஷ்டிராவில் சமாஜ்வாதி கட்சி எம்எல்ஏ அவுரங்கசீப் பற்றி புகழ்ந்ததை அடுத்து அவர் சட்டமன்ற கூட்டத்தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்யப்பட்டார்.

அம்மாநில அரசியலில் ஒளரங்கசீப் பிரச்சனை பெரும்பிரச்னையாக மாறியது. முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ், எல்லோரும் ஒளரங்கசீப் கல்லறையை இடிக்க விரும்புகிறார்கள், சட்டப்படி அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்திருந்தார்.

துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே பேசுகையில் "நாங்கள் மராத்தியர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கிறோம். உண்மையான தேசபக்தன் ஔரங்கசீப்பை போற்றமாட்டான். யாரும் ஔரங்கசீப்பை ஆதரிக்கமாட்டார்கள். மகாராஷ்டிரத்தின் எதிரியின் மிச்சங்களை நாம் ஏன் வைத்திருக்க வேண்டும்?" என்று பேசினார்.

இதற்கிடையில் ஆளும் பாஜக கூட்டணி, ஆர்எஸ்எஸ் மற்றும் இந்து அமைப்புகள் ஒளரங்கசீப் கல்லறையை இடிக்க தீவிரம் காட்டி வருவதை காங்கிரஸ் விமர்சித்துள்ளது.

காங்கிரஸ் எம்.எல்.ஏ விஜய் வடேட்டிவார் பேசுகையில், "மகாராஷ்டிர மக்களை நிம்மதியாக வாழவிடக்கூடாது என்பதற்காக இந்து அமைப்புகள் இவ்வாறு கலவரம் ஏற்படுத்த நினைக்கின்றன. மாநிலத்தின் அமைதியைக் குலைக்க இவர்கள் விரும்புகிறார்கள்" என்று தெரிவித்தார்.

முன்னதாக 1992 இல் இந்து அமைப்புகளால் உத்தரப் பிரதேசம் அயோத்தியில் இருந்த பாபர் மசூதி இடிக்கப்பட்டது. அந்த இடத்தில் மத்தியில் ஆளும் பாஜக அரசு கடந்த 2019 இல் ரூ.1800 கோடி செலவில்  ராமர் கோவில் கட்டியது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com