Vijay Vasanth | வளைகுடா நாடுகளில் சிக்கியுள்ள மீனவர்களை இந்தியா அழைத்து வர வேண்டும் - விஜய் வசந்த் எம்.பி. கோரிக்கை

அசாதாரண சூழலில் தவித்து வருவதாக கவலை தெரிவித்தார். மீனவர்கள் பெரும் பதற்றத்தில் இருப்பதாக குறிப்பிட்டார்.
Vijay Vasanth | வளைகுடா நாடுகளில் சிக்கியுள்ள மீனவர்களை இந்தியா அழைத்து வர வேண்டும் - விஜய் வசந்த் எம்.பி. கோரிக்கை
Published on

கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் S.ஜெய்சங்கரை நேரில் சந்தித்து முக்கிய கோரிக்கையை முன் வைத்தார்.

ஈரான் மற்றும் வளைகுடா நாடுகளில் நிலவி வரும் பதற்றமான சூழ்நிலை காரணமாக அங்கு வேலை செய்து வரும் கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் அண்டை மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் பலர் அச்சத்துடனும் அசாதாரண சூழலிலும் தவித்து வருவதாக அவர் கவலை தெரிவித்தார்.

குறிப்பாக சமீப காலமாக ஏற்பட்டுள்ள பிராந்திய மோதல்கள் மற்றும் பாதுகாப்பு சிக்கல்கள் காரணமாக அங்குள்ள இந்தியர்கள், குறிப்பாக தமிழ்நாட்டை சேர்ந்த மீனவர்கள் பெரும் பதற்றத்தில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதனை முன்னிட்டு, அந்த நாடுகளில் பணிபுரிந்து வரும் கன்னியாகுமரி மற்றும் அண்டை மாவட்டங்களை சேர்ந்த மீனவர்களின் நிலைமை குறித்து இந்திய தூதரகங்கள் மூலம் உடனடி தகவல் சேகரித்து, அவர்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்ய தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மத்திய அமைச்சரிடம் விஜய் வசந்த் எம்.பி. கேட்டுக்கொண்டார்.

மேலும், அங்கு சிக்கியுள்ள மீனவர்கள் விருப்பம் தெரிவித்தால் அவர்களை பாதுகாப்பாக இந்தியாவிற்கு திரும்ப அழைத்து வர சிறப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்றும், அவசர கால உதவி மையங்கள் மற்றும் தொடர்பு மையங்களை உருவாக்கி அவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு விரைந்து மேற்கொள்ள வேண்டும் எனவும், கன்னியாகுமரி மற்றும் அண்டை மாவட்ட மீனவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் எனவும் விஜய் வசந்த் எம்.பி. கேட்டுக்கொண்டார். இந்த கோரிக்கையை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சீரியமாக பரிசீலித்து தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று உறுதியளித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com