எப்ஸ்டீனை 3-4 முறை சந்தித்தேன் - ஒப்புக்கொண்ட மத்திய அமைச்சர் - ராகுல் குற்றச்சாட்டுக்கு விளக்கம்

அவர்கள் அவரது கழுத்தைப் பிடித்திருக்கிறார்கள். பிரதமரின் கண்களில் பயத்தைக் காணலாம்.சிறுமிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய ஜெப்ரி எப்ஸ்டீனுடன் தொடர்பிலிருந்த பல நாடுகளின் அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் மற்றும் தொழிலதிபர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
எப்ஸ்டீனை 3-4 முறை சந்தித்தேன் - ஒப்புக்கொண்ட மத்திய அமைச்சர்  - ராகுல் குற்றச்சாட்டுக்கு விளக்கம்
Published on

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில் இன்று (பிப்ரவரி 11) எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மக்களவையில் உரையாற்றினார்.

அமெரிக்கா - இந்தியா இடையே கடந்த வாரம் ஏற்பட்ட வர்த்தக ஒப்பந்தம் குறித்து ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.

மக்களவையில் ராகுல் காந்தி பேசியதாவது, "நீங்கள் இந்தியாவை விற்றுவிட்டீர்கள். இந்தியாவை விற்றதில் உங்களுக்கு வெட்கமில்லையா? நீங்கள் எங்கள் தாய் பாரத மாதாவை விற்றுவிட்டீர்கள்.

சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், பிரதமர் பலனில்லாமல் இந்தியாவை விற்க மாட்டார் என்பது எனக்குத் தெரியும். அவர் ஏன் இந்தியாவை விற்றார் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஏனென்றால் அவர்கள் அவரது கழுத்தைப் பிடித்திருக்கிறார்கள். பிரதமரின் கண்களில் பயத்தைக் காணலாம்.

ஒன்று அதானி மீதான அமெரிக்க வழக்கு, மற்றொன்று இன்னும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ள 'எப்ஸ்டீன் கோப்புகள்'. 30 லட்சம் கோப்புகள் இன்னும் வெளியாகவில்லை, அதுவே பிரதமரின் பயத்திற்கு காரணம்.

அனில் அம்பானி என்ற ஒரு தொழிலதிபர் இருக்கிறார், அவர் ஏன் இன்னும் சிறையில் அடைக்கப்படவில்லை? காரணம், எப்ஸ்டீன் கோப்புகளில் அவரது பெயர் உள்ளது.

அவரை எப்ஸ்டீனுக்கு அறிமுகப்படுத்திய ஹர்தீப் புரியிடமும் நான் கேட்க விரும்புகிறேன். அவரை யார் அறிமுகப்படுத்தினார்கள் என்பது எனக்குத் தெரியும், ஹர்தீப் புரியிடமும் அவரை யார் அறிமுகப்படுத்தினார்கள் என்பது எனக்குத் தெரியும்." என்று தெரிவித்தார்.

இந்நிலையில், ராகுல் காந்தி முன்வைத்த எப்ஸ்டீன் கோப்புகள் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி செய்தியாளர் சந்திப்பில் விளக்கமளித்துள்ளார்.

ராகுல் காந்தி பேசுவது கோமாளித்தனம் என்றும் 2014-2015 காலகட்டத்தில் தான் 'சர்வதேச அமைதி கழக' (International Peace Institute - IPI ) ஆணையத்தின் செயலாளராகப் பணியாற்றியபோதுதான் எப்ஸ்டீனைச் சந்தித்ததாகவும் பூரி கூறினார்.

எப்ஸ்டீனை தான் ஒரு குழுவாகவே சந்தித்ததாகவும், அதிகபட்சமாக 3 அல்லது 4 முறை மட்டுமே அவரைச் சந்தித்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், "2014-ஆம் ஆண்டு 'லிங்க்ட்இன்' நிறுவனர் ரீட் ஹாஃப்மேன் இந்தியா வருவது குறித்து எப்ஸ்டீனுடன் மின்னஞ்சல் பரிமாற்றம் நடந்தது. அந்த மின்னஞ்சலில், இந்தியாவின் இணையப் பொருளாதார வளர்ச்சி மற்றும் முதலீட்டு வாய்ப்புகள் குறித்து மட்டுமே பேசினேன்.

எப்ஸ்டீன் மற்றும் IPI தலைவர் டெர்ஜே ரோட்-லார்சன் ஆகியோர் தங்களுக்குள் பரிமாறிக்கொண்ட மின்னஞ்சலில், என்னை நேர்மையற்றவர் என்று குறிப்பிட்டிருப்பதை ராகுல் காந்தி படிக்க வேண்டும்.

அவர்களது சட்டவிரோதச் செயல்களுக்கு நான் ஒத்துழைக்காததால் தான் அவர்கள் என்னைப் பிடிக்காமல் அவ்வாறு கூறினார்கள்" என்று பூரி தெரிவித்தார்.

அண்மையில் அமெரிக்க நீதித்துறை சுமார் 35 லட்சம் பக்கங்கள் கொண்ட ஆவணங்களை வெளியிட்டது. இதில் சிறுமிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய ஜெப்ரி எப்ஸ்டீனுடன் தொடர்பிலிருந்த பல நாடுகளின் அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் மற்றும் தொழிலதிபர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

பிரதமர் மோடி, அனில் அம்பானி, மத்திய அமைச்சர் ஹர்திப் சிங் பூரி ஆகியோரின் பெயர்களும் இடம்பெற்றிருந்தன. இதன் பின்ணனியிலேயே ராகுல் காந்தி இன்று மக்களவையில் பேசியுள்ளார்.  

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com