'க்ரீன் சிக்னல் கொடுத்த சோனியா... ராகுல் காந்தியால் பறிபோன முதலமைச்சர் பதவி' - ஹிமந்தா சர்மா பகீர்

நான் காங்கிரஸிலேயே நீடித்திருந்தால் எனக்கு என்ன கிடைத்திருக்குமோ, அதைவிட மிக அதிகமானவற்றை இறைவன் எனக்கு வழங்கியிருக்கிறார்.2014 ஆம் ஆண்டு தருண் கோகோய் அமைச்சரவையில் இருந்து ஹிமந்தா பிஸ்வா சர்மா ராஜினாமா செய்தார்.
'க்ரீன் சிக்னல் கொடுத்த சோனியா... ராகுல் காந்தியால் பறிபோன முதலமைச்சர் பதவி' - ஹிமந்தா சர்மா பகீர்
Published on

அசாம் மாநில முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, 2014-ஆம் ஆண்டிலேயே தாம் முதலமைச்சராகப் பதவியேற்க வேண்டிய சூழல் இருந்ததாகவும், ஆனால் ராகுல் காந்தியின் தலையீட்டால் அப்போது நிலைமை தலைகீழாக மாறியதாகவும், அதனால் தான் அந்த பதவியை இழந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இன்று மாநில சட்டமன்றத்தில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஹிமந்தா சர்மா,

"நான் இன்னும் மேடம் என அழைக்கும் அவர் (சோனியா காந்தி) என்னிடம் தேதியை முடிவு செய்யச் சொன்னார். ஜூன் (2014) மாதம் காமாக்யா கோயிலில் நடக்கும் அம்புபாச்சி மேளாவுக்கு அடுத்த நாள் நான் சத்தியப்பிரமாணம் செய்வேன் என்று அவரிடம் சொன்னேன்.

ஆனால் அமெரிக்காவில் இருந்துவந்த ராகுல் காந்தியின் அழைப்பால் நிலைமை மாறியது. எனக்கு நீதி வழங்கப்படவில்லை, ஆனால் கார்கே எப்போதும் கட்சியில் உள்ள எனது எதிரிகளிடம்: 'நீங்கள் ஹிமந்தாவுடன் சண்டையிடுங்கள், ஆனால் அவரிடம் தான் எம்.எல்.ஏ-க்கள் இருக்கிறார்கள் என்று சொல்வார்.

அப்போது நான் மனவேதனை அடைந்தேன், ஆனால் இப்போது ஒருவருடைய வாழ்க்கையில் நடப்பதெல்லாம் நன்மைக்கே என்று நான் நம்புகிறேன். நான் காங்கிரஸிலேயே நீடித்திருந்தால் எனக்கு என்ன கிடைத்திருக்குமோ, அதைவிட மிக அதிகமானவற்றை இறைவன் எனக்கு வழங்கியிருக்கிறார்.

பாஜக முதலமைச்சராக, அசாம் மாநிலத்திற்கும் சனாதன தர்மத்திற்கும் முழுமனதுடன் சேவை செய்யும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. நான் காங்கிரஸில் இருந்திருந்தால் இது சாத்தியமாகி இருக்காது. இதற்காக நான் ராகுல் காந்திக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இவை அனைத்தும் உண்மைகள், இதற்கு பல சாட்சிகள் உள்ளனர். ஆனால், நடக்காமல் போனதற்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்; ஏனெனில் அது நடந்திருந்தால், நான் என்றென்றும் களங்கப்பட்டிருப்பேன்." என்று தெரிவித்துள்ளார்.

2014-இல் அசாம் காங்கிரஸில் ஏற்பட்ட உட்கட்சிப் பூசலின் போது, 58 எம்.எல்.ஏ.க்கள் ஹிமந்தா சர்மாவுக்கு ஆதரவு அளித்ததாகவும், ஒருசிலர் நடுநிலை வகித்ததாகவும், அதே நேரத்தில் 12 பேர் மட்டுமே தருண் கோகோயின் ஆட்சி தொடரவேண்டும் எனக் கூறியதாகவும் தெரிவித்தார். 

2014 ஆம் ஆண்டு தருண் கோகோய் அமைச்சரவையில் இருந்து ஹிமந்தா பிஸ்வா சர்மா ராஜினாமா செய்தார். அடுத்த ஆண்டு காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். பின்னர் 2021-ல் அசாமின் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com