பிரசவ வலியால் துடித்த பெண்ணை தோளில் தூக்கி சென்று காப்பாற்றிய ராணுவ வீரர்கள்

கர்ப்பிணியை ஒரு ஸ்ட்ரெச்சரில் வைத்து தோளில் சுமக்க தொடங்கினர். பல கிலோமீட்டர் தூரம் நடந்து பாதுகாப்பான இடத்திற்குச் சென்றனர்.
பிரசவ வலியால் துடித்த பெண்ணை தோளில் தூக்கி சென்று காப்பாற்றிய ராணுவ வீரர்கள்
Published on

காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தின் கர்னா பகுதி எப்போதும் அடர்ந்த பனி சூழ்ந்து காணப்படும். இங்குள்ள ஜப்தி பிஜல்தார் கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண் பிரசவ வலியால் துடித்தார்.

கடுமையான பனிப்பொழிவு அந்தப் பகுதி முற்றிலுமாக துண்டித்து காணப்பட்டது. சாலைகள் பல அடி உயரத்திற்கு பனியால் மூடப்பட்டிருந்ததால், வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

எனினும் ஆம்புலன்ஸ் மூலம் கர்ப்பிணியை ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்ல முயன்றனர். சிறிது தூரம் சென்ற ஆம்புலன்ஸ் கொனகப்ரா அருகே கடும் பனியில் சிக்கிக்கொண்டது. கர்ப்பிணி கடும் பிரசவ வலியால் அலறி துடித்துக்கொண்டிருந்தார்.

இந்த விவரம் அறிந்த இந்திய ராணுவ துணைப் பிரிவு தலைமையகமான டாங்தாரிலிருந்து 104-வது படைப்பிரிவின் வீரர்கள் அங்கு விரைந்தனர். அவர்கள் கர்ப்பிணியை ஒரு ஸ்ட்ரெச்சரில் வைத்து தோளில் சுமக்க தொடங்கினர். பல கிலோமீட்டர் தூரம் நடந்து பாதுகாப்பான இடத்திற்குச் சென்றனர். அங்கு தயாராக நின்ற ஒரு ஜே.சி.பி. எந்திரம் பாதையை சரி செய்து ஆம்புலன்ஸ் செல்ல வழி ஏற்படுத்தியது.

இதையடுத்து ராணுவம், காவல்துறை, சுகாதாரத்துறை மற்றும் உள்ளூர் மக்களின் உதவியுடன், அந்தப் பெண் பாதுகாப்பாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், அங்கு அவர் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த உயிர்காக்கும் நடவடிக்கையில் ஈடுபட்ட ராணுவ வீரர்கள், போலீசார், ஊழியர்களின் மனிதநேய செயலை பொதுமக்கள் வெகுவாக பாராட்டி நன்றி தெரிவித்தனர். சரியான நேரத்தில் இந்த உதவி இல்லையென்றால் ஏதாவது அசம்பாவிதம் நடந்திருக்கலாம் என்றும் அவர்கள் கூறினர். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com