தேச நலனுக்காக பணியாற்றுவது கட்சி விரோத செயல் அல்ல - சசிதரூர்

நான் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு எம்.பி. எனது பதவிக்காலம் முடிய இன்னும் 4 ஆண்டுகள் உள்ளன.அமெரிக்கா மீது எங்களுக்கு மிகுந்த மரியாதை உள்ளது.
தேச நலனுக்காக பணியாற்றுவது கட்சி விரோத செயல் அல்ல - சசிதரூர்
Published on

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே போர்ப் பதற்றம் நிலவியது. 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை மூலம் பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத கட்டமைப்புகள் மீது இந்தியா தாக்குதல் நடத்தி அழித்தது. 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை தொடர்பாக, உலக நாடுகளுக்கு விவரிக்க மத்திய அரசு 7 குழுக்களை அமைத்துள்ளது.

அவற்றுள் காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் தலைவராக பொறுப்பேற்றுள்ள ஒரு குழுவும் ஒன்று. சசிதரூரை தவிர, அந்த குழுவில் எம்.பி.க்கள் சர்பராஸ் அகமது, காந்தி ஹரிஷ் மதுர் பாலயோகி, சஷாங்க் மணி திரிபாதி, புவனேஸ்வர் கலிதா, மிலிந்த் தியோரா, தேஜஸ்வி சூர்யா மற்றும் அமெரிக்காவுக்கான இந்தியாவின் முன்னாள் தூதர் தரஞ்சித் சந்து ஆகியோர் அடங்குவர்.

கடந்த மாதம் 24-ந்தேதி இந்தியாவில் இருந்து நியூயார்க் சென்று கயானா, பனாமா, கொலம்பியா, பிரேசிலுக்கு பயணம் செய்து கடந்த 3-ந் தேதி இந்த குழு சுற்றுப்பயணத்தின் கடைசி கட்டமாக வாஷிங்டனுக்கு வந்தது. அங்கு அமெரிக்க செனட் குழுவினர், அரசு அதிகாரிகள் உள்பட பல்வேறு தரப்பினரை சந்தித்து பேசினர்.

பின்னர் அங்கு சசி தரூர் கூறியதாவது:-

பாகிஸ்தான் மோதலை நிறுத்தினால், நாங்களும் நிறுத்த தயாராக இருப்பதாக கூறினோம். பாகிஸ்தான் அதை ஏற்றுக்கொண்டதன்பேரில் மோதல் நிறுத்தப்பட்டது. பாகிஸ்தான் பயங்கரவாதத்தின் மொழியை பயன்படுத்தும் வரை, நாங்கள் பலத்தின் மொழியை பயன்படுத்துவோம் அதற்கு மூன்றாம் தரப்பு தேவையில்லை.

தேச நலனுக்காக பணியாற்றுவது கட்சி விரோத செயல் என்று கருதுபவர்கள் தங்களை தாங்களே கேள்வி கேட்டு கொள்ள வேண்டும். தனிநபர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை பற்றி கவலைப்பட வேண்டியது இல்லை.

சமூக ஊடகங்களில் சசி தரூர் காங்கிரசில் தொடர்ந்து இருப்பாரா? அல்லது பா.ஜனதாவில் சேருவாரா? என்பது குறித்து விவாதம் நடைபெறுகிறது. நான் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு எம்.பி. எனது பதவிக்காலம் முடிய இன்னும் 4 ஆண்டுகள் உள்ளன. இந்நிலையில் அது குறித்து ஏன் கேள்வி எழ வேண்டும் என்று எனக்கு தெரியவில்லை.

நாங்கள் இங்கு ஒரு கட்சி அரசியல் நோக்கத்துக்காக வரவில்லை. ஒன்றுபட்ட இந்தியாவின் பிரதிநிதிகளாக வந்து இருக்கிறோம். தேசிய நலன், தேசிய பாதுகாப்பு என்று வரும்போது தேசம் ஒன்றுபட்டுள்ளது என்று நினைக்கிறேன்.

யாரும் எங்களை மோதலை நிறுத்துங்கள் என்று மத்தியஸ்தம் செய்ய வேண்டிய அவசியமில்லை. அமெரிக்கா மீது எங்களுக்கு மிகுந்த மரியாதை உள்ளது. மத்தியஸ்தம் செய்வதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் மீண்டும் மீண்டும் கூறுவதை கவனிக்க வேண்டிய அவசியமில்லை. ஏனென்றால் வெள்ளை மாளிகையுடனான இந்தியா உறவில் எந்தவிதமான சிக்கல்களையும் ஏற்படுத்த நாங்கள் இங்கு வரவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com