

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:-
பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின் இல்லமாக பாகிஸ்தான் உள்ளது. பின்லேடன் கூட பாகிஸ்தானில் தான் தஞ்சம் அடைந்திருந்தார்.
உலகளாவிய பயங்கரவாதத்தின் மையம் என்ற பெயரைத் தான் பாகிஸ்தான் பெற்றிருக்கிறது.
உலகில் நடந்த பல்வேறு தாக்குதல்களில் பாகிஸ்தானின் பங்கு உள்ளதாக கூறப்படுகிறது.
பாகிஸ்தானை சேர்ந்த 2 அமைச்சர்கள் சில பயங்கரவாத அமைப்புகளுக்கு உதவிக்கரம் நீட்டுவதை போல் பேசி இருந்தனர்.
பதான்கோட் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் தான் பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தியாவில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளின் டிஎன்ஏ உள்பட முழு விவரங்களையும் பாகிஸ்தானிடம் கொடுத்துள்ளோம்.
ஆனால், இந்தியா அளித்த ஆதாரங்களுக்கு பாகிஸ்தான் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
நேற்று கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் இறுதிச் சடங்கில் கூட சில பாகிஸ்தான் அரசு அதிகாரிகள் கலந்துக்கொண்டு மரியாதை செலுத்தினர்.
குறிப்பாக பாகிஸ்தான் கொடியை உயிரிழந்த பயங்கரவாதிகள் மீது போர்த்தி அரசு மரியாதை வழங்கப்பட்டடதையும் பார்க்க முடிந்தது. பயங்கரவாதிகளுக்கு அரசு மரியாதை செலுத்துவது பாகிஸ்தானின் வழக்கமாக உள்ளது.
இந்தியாவின் நோக்கம் பயங்கரவாதிகளை தாக்குவது மட்டுமே, மதம் சார்ந்த இடங்களை நாம் தாக்கவில்லை. ஆனால், பாகிஸ்தானின் குறிப்பிட்ட மத வழிபாட்டுத் தலங்களை இந்தியா தாக்கியதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டுகிறது.
ஆனால், பயங்கராத முகாம்கள் மட்டுமே தாக்கப்பட்டதற்கு எங்களிடம் ஆதாரம் உள்ளது.
இந்தியாவின் பதில் நடவடிக்கை மீது வகுப்புவாத சாயம் பூச பாகிஸ்தான் முயற்சிக்கிறது.
பாகிஸ்தானின் உள்நோக்கம் இந்தியாவில் வெற்றிபெற நாம் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்.
தற்போது அழிக்கப்பட்டுள்ள முகாம்களுக்கும், இந்திய எல்லையில் தாக்குதலுக்கு ஆளான பகுதிகளுக்கும் உறுதியான இணைப்பு உள்ளது.
பாகிஸ்தான் பதிலடி கொடுப்பதாக கூறி எடுக்கும் நடவடிக்கைகள் அனைத்தும் பொது மக்களை தான் பாதிக்கிறது.
சிந்து நதி ஒப்பந்தம் குறித்து விவாதிக்க பலமுறை நோட்டீஸ் அனுப்பியும் பாகிஸ்தான் தரப்பில் இருந்து எந்தவித பதிலும் இல்லை.
தாக்குதல் தொடர்பான நுட்பமான அம்சங்களை தற்போது வெளியிட முடியாது.
இருநாட்டு பாதுகாப்பு ஆலோசர்களும் பேச்சுவார்த்தை நடத்தியது தொடர்பான தகவல் என்னிடம் இல்லை.
அமைதிப் பேச்சுவார்த்தை தொடர்பாக அமைச்சரவைக்குழு உள்ளிட்ட அமைப்புகள் சூழலை பொறுத்து முடிவு எடுக்கும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.