அரசியலுக்கு அப்பாற்பட்டது ஜனாதிபதி பதவி: மம்தாவை சாடிய பிரதமர் மோடி #PMModi

பழங்குடியின மக்களுக்கான சிறப்பு நிகழ்ச்சி ஒன்றில் ஜனாதிபதி திரவுபதி முர்மு கலந்துகொண்டார்.ஜனாதிபதியை வரவேற்க மம்தா பானர்ஜியோ அல்லது அவர் சார்பில் எந்த ஒரு அமைச்சரோ செல்லவில்லை.
அரசியலுக்கு அப்பாற்பட்டது ஜனாதிபதி பதவி: மம்தாவை சாடிய பிரதமர் மோடி #PMModi
Published on

புதுடெல்லி:

மேற்கு வங்கத்தில் பழங்குடியின மக்களுக்கான சிறப்பு நிகழ்ச்சி ஒன்றில் ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று கலந்துகொண்டார். ஆனால் அந்த நிகழ்ச்சி ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்த பிதாநகர் பகுதியிலிருந்து பாக்தோக்ரா விமான நிலையம் அருகேயுள்ள கோஷாய்பூருக்கு மாற்றப்பட்டது.

இந்த நிகழ்ச்சி இடமாற்றத்தால் சொற்ப எண்ணிக்கையிலான பார்வையாளர்கள் மட்டுமே அதில் பங்கேற்றனர் எனவும், இதற்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் அரசின் அரசியல் காழ்ப்புணர்ச்சியே காரணம் எனவும் குற்றம்சாட்டப்பட்டது.

இதற்கிடையே, ஜனாதிபதி வருகையின்போது அவரை வரவேற்க மம்தா பானர்ஜியோ அல்லது அவர் சார்பில் எந்த ஒரு அமைச்சரோ செல்லவில்லை என்றும் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. இவை அனைத்தையும் நிகழ்ச்சியில் மேடையேறிய ஜனாதிபதி முர்மு தமது உரையில் சுட்டிக்காட்டிப் பேசினார். இந்தக் குற்றச்சாட்டுக்கு முதல் மந்திரி மம்தா பானர்ஜி பதிலளித்தார்.

இந்நிலையில், ஜனாதிபதி பதவி அரசியலுக்கு அப்பாற்பட்டது என பிரதமர் மோடி குறிப்பிட்டிருக்கிறார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:

திரிணாமுல் காங்கிரஸ் அரசு உண்மையில் எல்லைகளை மீறிச் செயல்பட்டு வருகிறது. ஜனாதிபதி அவமதிக்கப்பட்டதற்கு அவர்களது நிர்வாகமே பொறுப்பாகும். இது வெட்கக்கேடானது; பழங்குடியின சமூகங்களின் முன்னேற்றத்தின்மீது நம்பிக்கை பூண்டுள்ள ஒவ்வொருவரும் மனம் நொந்து போயுள்ளனர்.

பழங்குடியின சமூகப் பின்புலத்திலிருந்து வந்துள்ள ஜனாதிபதி முர்மு வெளிப்படுத்தியிருக்கும் வேதனையானது, இந்திய மக்களின் மனங்களிலும் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜனாதிபதி பதவி அரசியலுக்கு அப்பாற்பட்டது. அதன் மாண்பு எப்போதுமே மதிக்கப்பட வேண்டும் என தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com