மோடியின் கோழைத்தனம்.. இஸ்ரேல் சென்று திரும்பிய 48 மணி நேரத்தில் ஈரான் மீது தாக்குதல் - காங்கிரஸ் சாடல்

இந்தியா இஸ்ரேலுடன் நிற்கிறது என்று மோடி அறிவித்தார். அவ்வாறு சொன்னதற்காக ஒரு விருதையும் பெற்றுக்கொண்டார்.
மோடியின் கோழைத்தனம்.. இஸ்ரேல் சென்று திரும்பிய 48 மணி நேரத்தில் ஈரான் மீது தாக்குதல் - காங்கிரஸ் சாடல்
Published on

பயங்கரவாதிகளிடம் அணு ஆயுதங்கள் இருக்கக்கூடாது என கூறி அமெரிக்கா - இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது இன்று காலை முதல் தாக்குதல் நடத்தி வருகிறது.

தலைநகர் தெஹ்ரான் உள்ளிட்ட முக்கிய நகரங்களை குறிவைத்து தாக்குதல் நடந்து வருகிறது. இதில் சாமானிய மக்கள் பலர் உயிரிழந்துள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது.

பதிலடியாக இஸ்ரேல் மீதும், அண்டை நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீதும் ஈரான் புரட்சிகர ராணுவ படையினர் டிரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகின்றனர். 

ஈரான், இஸ்ரேல் மற்றும் பதற்றம் ஏற்பட்டுள்ள பிற நாடுகளில் உள்ள இந்தியர்கள் பத்திரமாக இருக்க தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில் இந்த விவகாரத்தில் மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள எக்ஸ் பதவில், " அமெரிக்கா-இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே அதிகரித்து வரும் விரோதப் போக்கு மிகவும் கவலையளிக்கிறது.

மத்திய கிழக்கு முழுவதும் உள்ள ஒவ்வொரு இந்திய குடிமகனின் பாதுகாப்பும் நமது மிக உயர்ந்த முன்னுரிமையாக இருக்க வேண்டும்.

நமது மக்களைப் பாதுகாக்க உடனடி மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு மத்திய அரசிடம் நான் கேட்டுக்கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட பதிவில், "பிரதமர் மோடி தனது இஸ்ரேல் பயணத்தைக் கொண்டாடிய இரண்டு நாட்களுக்குப் பிறகு, இஸ்ரேலும் அமெரிக்காவும் ஈரான் மீதான தங்களின் கூட்டுத் தாக்குதலைத் தொடங்கியுள்ளன.

கடந்த சில மாதங்களாக அவர்களின் ராணுவக் குவிப்பை வைத்துப் பார்க்கும்போது இது முற்றிலும் எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான்.

இருப்பினும், பிரதமர் மோடி இஸ்ரேலுக்குச் செல்லத் தீர்மானித்தார், அங்கு அவர் மிக உயர்ந்த அளவிலான தார்மீக  கோழைத்தனத்தைக் காட்டினார்.

இந்தியா இஸ்ரேலுடன் நிற்கிறது என்று அவர் அறிவித்தார், அவ்வாறு சொன்னதற்காக ஒரு விருதையும் பெற்றுக்கொண்டார்.

இந்த இஸ்ரேல் பயணம் வெட்கக்கேடானது, பிரதமர் மோடியின் 'நல்ல நண்பர்கள்' இருவரால் தொடங்கப்பட்டுள்ள இந்தப் போரின் பின்னணியில் இது இன்னும் அவமானகரமானது.

பல வாரங்களாக அதிபர் டிரம்ப், ஈரானுடன் ராஜதந்திரம் மற்றும் பேச்சுவார்த்தை நடத்துவது போன்ற ஒரு நாடகத்தை அரங்கேற்றினார்.

அவர் ஆட்சி மாற்றத்தை நோக்கமாகக் கொண்டு ஒரு ராணுவத் தாக்குதலைத் தொடங்கியுள்ளார்.

இந்திய தேசிய காங்கிரஸ் இந்தத் தாக்குதலைக் கண்டிக்கிறது மற்றும் மோதல்களை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர உதவுமாறு மத்திய அரசை வலியுறுத்துகிறது.

மேற்கு ஆசிய பிராந்தியத்தில் வசிக்கும் மற்றும் பணிபுரியும் மில்லியன் கணக்கான இந்தியர்களின் பாதுகாப்பையும் நல்வாழ்வையும் உறுதிப்படுத்த மத்திய அரசு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்." என்று வலியுறுத்தியுள்ளார்.  

பிரதமர் மோடி 2 நாள் பயணமாக கடந்த பிப்ரவரி 25 இல் இஸ்ரேல் சென்று திரும்பிய 48 மணிநேரத்தில் இஸ்ரேலும், அமெரிக்காவும் ஈரான் மீதான தாக்குதலை தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேல் பாராளுமன்றத்தில் பிரதமர் மோடிக்கு அந்நாட்டின் உயரிய விருது வழங்கி கௌரவிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com