மீண்டும் கொலை செய்யப்பட்ட மகாத்மா காந்தி.. பாஜக அரசு மீது சித்தராமையா பாய்ச்சல்

பெண்கள், தலித்துகள் மற்றும் சூத்திரர்கள் கையில் பணம் புழங்கக்கூடாது, அவர்கள் சுயமரியாதையோடு வாழக்கூடாது என்று மனுஸ்மிருதி சொல்கிறது.100% ஊதியத்தை மத்திய அரசு வழங்கியது. இப்போது மத்திய அரசு 60% மட்டும் வழங்கும், மீதமுள்ள 40 சதவீதத்தை மாநில அரசுகள் வழங்க வேண்டும் என்கிறார்கள்.
மீண்டும் கொலை செய்யப்பட்ட  மகாத்மா காந்தி.. பாஜக அரசு மீது சித்தராமையா பாய்ச்சல்
Published on

மத்திய பாஜக அரசு மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டமான 100 நாள் வேலைத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, அதற்கு 'விபி ஜி ராம் ஜி' என்று பெயர் சூட்டியது.

மேலும் திட்டத்தில் பல்வேறு திருத்தங்களையும் கொண்டு வந்து மசோதா நிறைவேற்றி அது சட்டமாகவும் மாறியது.

இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில் பெங்களூருவில் இன்று நடந்த நிகழ்வு ஒன்றில் பேசிய கர்நாடக முதல்வர் சித்தராமையா,

"மகாத்மா காந்தியை முதல்முறை கோட்சே கொன்றார். இப்போது இந்த அரசு அவரை இரண்டாம் முறையாகக் கொல்கிறது.

மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது ஏழைகள் மற்றும் சிறு விவசாயிகளுக்காக வேலை செய்யும் உரிமையைக் கொண்டு வந்தார்.

இப்போது மத்திய அரசு மாநிலங்களைக் கலந்தாலோசிக்காமல், சர்வாதிகாரப் போக்கோடு இந்த விபி ஜி ராம் ஜி சட்டத்தைக் கொண்டு வந்துள்ளது.

நாடாளுமன்றத்தில் டிசம்பர் 17-ல் கொண்டு வந்து, அடுத்த நாளே விவாதம் இன்றி இந்தச் சட்டத்தை நிறைவேற்றிவிட்டார்கள். இது கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது.

பஞ்சாயத்துகளுக்கு இருந்த அதிகாரங்களைப் பறித்துவிட்டு, இனி எந்த ஊருக்கு வேலை வழங்க வேண்டும் என்பதை டெல்லியில் இருந்து மத்திய அரசே முடிவு செய்யும்.

முன்பு 100% ஊதியத்தை மத்திய அரசு வழங்கியது. இப்போது மத்திய அரசு 60% மட்டும் வழங்கும், மீதமுள்ள 40 சதவீதத்தை மாநில அரசுகள் வழங்க வேண்டும் என்கிறார்கள். இது அரசியலமைப்பிற்கு எதிரானது.

பெண்கள், தலித்துகள் மற்றும் சூத்திரர்கள் கையில் பணம் புழங்கக்கூடாது, அவர்கள் சுயமரியாதையோடு வாழக்கூடாது என்று மனுஸ்மிருதி சொல்கிறது.

ஆர்எஸ்எஸ் அந்த மனுஸ்மிருதியால் ஈர்க்கப்பட்டது. அந்த ஆர்எஸ்எஸ் தான் பாஜகவை வழிநடத்துகிறது. அதனால்தான் ஏழைகளின் வாழ்வாதாரமான இந்தத் திட்டத்தைச் சிதைக்கப் பார்க்கிறார்கள்.

இந்த விபி ஜி ராம் ஜிசட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். பழைய 100 நாள் வேலைத் திட்டத்தையே மீண்டும் கொண்டு வர வேண்டும்.

வேளாண் சட்டங்களைப் போராடித் திரும்பப் பெற வைத்தது போல, இந்த மக்கள் விரோதச் சட்டத்தையும் திரும்பப் பெற வைக்கும் வரை நாங்கள் ஓயமாட்டோம்" என்று தெரிவித்தார். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com