

உத்தரபிரதேச மாநிலத்தில் மகா கும்பமேளா கடந்த 13-ந்தேதி தொடங்கியது. கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி (புராண நதி) ஆகிய 3 புனித நதிகள் பிரயாக்ராஜ் நகரில் சங்கமிக்கும் 'திரிவேணி சங்கமம்' இடத்தில் முதல் நாளில் 1 கோடி பேர் நீராடினர்.
பிப்ரவரி 26-ந்தேதி வரை 45 நாட்களுக்கு நடைபெறும் கும்பமேளாவில் 40 கோடி பக்தர்கள் பங்கேற்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை 13 கோடிக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தந்துள்ளனர்.
இந்நிலையில் விண்வெளியில் சர்வதேச விண்வெளி மையத்திலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களை அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிலைய (நாசா) விண்வெளி வீரரான டான் பெட்டிட் என்பவர் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.
நாசா வீரர் வெளியிட்ட பதிவில், '2025ம் ஆண்டு மகா கும்பமேளா நிகழ்ச்சியின் நடந்து வருகிறது. இது இரவில் சர்வதேச விண்வெளி மையத்திலிருந்து எடுத்த புகைப்படம். உலகில் அதிகளவில் மனிதர்கள் கூடும் இந்த விழாவை முன்னிட்டு, இரவு வேளையில் நகரம் ஒளிர்கிறது' என குறிப்பிட்டு இருந்தார்.
இதன் மூலம் கோடிக்கணக்கான மக்கள் வந்து செல்லும் விழா சர்வதேச அளவில் பிரபலமாகியுள்ளது.